Tuesday 1 January 2013

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு : அட்டவணை வெளியீடு



                                         பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் தேதியை, தேர்வுத்துறை நேற்று அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது . 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 27ல் துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து
வருவதால், தேர்வு அட்டவணை, எந்நேரமும் வெளியாகலாம் என, மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். தேர்வு அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, தேர்வுத்துறை அனுப்பியிருந்தது. இதற்கு, நேற்று ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, பொதுத்தேர்வு துவங்கும் தேதி மற்றும் அட்டவணையை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
                                            பிளஸ் 2 : அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, 27 வரை நடக்கின்றன. தொழிற்கல்வி சேர்க்கை, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடப்பதால், முக்கிய பாட தேர்வுகளுக்கு, போதுமான இடைவெளி அளித்து, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மொழிப்பாட தேர்வுகளுக்குப் பின், முக்கிய பாட தேர்வுகள், மார்ச், 11ல் துவங்குகிறது. அன்று, இயற்பியல் தேர்வு நடக்கிறது. 14ம் தேதி, கணிதம், விலங்கியல் தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி, வேதியியல் தேர்வு நடக்கிறது. அடுத்து, இரு நாள் இடைவெளிக்குப் பின், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வுகள் நடக்கின்றன. இதனால், முக்கிய பாட தேர்வுகளுக்கு, கடைசி நேரத்தில், மாணவர்கள் நன்றாக தயாராவதற்கு, வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன.
                                        
பத்தாம் வகுப்பு : இத்தேர்வு, மார்ச், 27ல் துவங்கி, ஏப்ரல், 12 வரை நடக்கின்றன. இதிலும், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் தேர்வுகளுக்கு, போதிய இடைவெளி தரப்பட்டுள்ளன. கணிதத் தேர்வு, ஏப்ரல், 5ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி, அறிவியல் தேர்வும், 12ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 10.5 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.
                                    
பதிவெண்கள் எப்போது ? : பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், செய்முறைத் தேர்வு துவங்கிவிடும். அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கு, பொங்கல் முடிந்ததும், பதிவெண்கள் வழங்கப்படும்.பிப்ரவரி, 20ம் தேதி வரை, செய்முறைத்தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, பிற்பகல் 1:15க்கு முடியும். 10:00 மணி முதல், 10:15 வரையான 15 நிமிடங்களில், முதல் 10 நிமிடங்கள், கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள், விடைத்தாளில் பதிவெண்கள் உள்ளிட்ட விவரங்களை பதியவும் ஒதுக்கப்படும். 3 மணி நேரம் வரை தேர்வு நடக்கும்.
                    
பத்தாம் வகுப்பு தேர்வு, காலை 10:00 மணிக்கு துவங்கி, 12:45க்கு முடியும். விடை எழுதுவதற்கான நேரம், 10:15க்கு துவங்கி, 12:45 வரை, 2:30 மணி நேரம் வரை நடக்கும். பத்தாம் வகுப்பில், அறிவியல் பாடத்திற்கு செய்முறைத் தேர்வு நடக்கிறது. இத்தேர்வு, பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ நடக்கலாம்
.

No comments:

Post a Comment