Friday 1 March 2013

10ம் வகுப்பு தேர்வு: மாணவர்களை விட மாணவியர் குறைவு



         வரும், 27ம் தேதி முதல், ஏப்., 12 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 10.68 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 17,916 பேர், கூடுதலாக எழுதுகின்றனர். இவர்களில், 16,362 பேர் மாணவர்; மாணவியர், 1,554 பேர். முந்தைய பொதுத் தேர்வை, 10 லட்சத்து, 50 ஆயிரத்து, 922 பேர் எழுதினர். இந்த ஆண்டு, 10
லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் எழுதுகின்றனர். இவர்களில், மாணவர், 5 லட்சத்து 43 ஆயிரத்து, 152 பேர்; மாணவியர், 5 லட்சத்து, 25 ஆயிரத்து 686 பேர். தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 11,344 பள்ளிகளில் இருந்து, 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. இந்த தேர்வை, தனித்தேர்வாக, 53,120 பேர் எழுதுகின்றனர். இவர்களையும் சேர்த்தால், மொத்த தேர்வர்களின் எண்ணிக்கை, 11.21 லட்சமாக உள்ளது.
                                  
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 5 லட்சத்து, 26 ஆயிரத்து, 790 மாணவர், தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு, 5 லட்சத்து, 43 ஆயிரத்து 152 பேர் பங்கேற்கின்றனர். 5 லட்சத்து, 24 ஆயிரத்து 132 மாணவியர், முந்தைய தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு, 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மட்டுமே எழுதுகின்றனர். மாணவர் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 1,554 பேர் மட்டுமே, இந்த ஆண்டு கூடுதலாக எழுதுகின்றனர். ஆரம்ப வகுப்புகளில், மாணவியர் அதிகளவில் பள்ளிகளில் சேர்கிற போதும், அவர்கள் அனைவரும், 10ம் வகுப்பு வரை, பிளஸ் 2 வரை தொடர்கின்றனரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
                                   
கிராமப்புறங்களில், அதிகமான மாணவியர், படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலை உள்ளது. இதன் காரணமாகவே, மாணவியர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. பெண் கல்விக்காகவும், இடைநிற்றலை, முற்றிலுமாக தடுத்து நிறுத்தவும், மத்திய, மாநில அரசுகள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அப்படியிருந்தும், மாணவியர் எண்ணிக்கை சரிந்திருப்பது, கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
.

No comments:

Post a Comment