அனுபவ கல்வியை கிராமத்து பள்ளிக்கூடங்களில் தான் பெற முடியும் என்று மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமிபதி தெரிவித்தார். ஆலங்குடியை அடுத்த கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண் காட்சி
நடத்தப் பட்டது. ஊராட்சி தலைவர் லலிதா விஜயகுமார் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் கவிதா முன்னிலை வகித்தார். அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இக்கண்காட்சியில், மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையிலும், அறிவியல் சிந்தனைகளை எளிதில் கற்றுக்கொண்டு ஆராய்ச்சியில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் படைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவ, மாணவிகள் காட்சிக்கு வைத்திருந்த படைப்புகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சேவியர்ராஜ், விரிவுரையாளர் மாரியப்பன் மற்றும் கண்ணக்கன்காடு, வெட்டன்விடுதி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் பார்வையிட்டனர்.
புதுக்கோட்டை மாவ ட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமிபதி பேசியதாவது: இந்தியாவின் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் பயிலும் செல்வந்தர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்கு அரிசி தெரிந் திருக்கிறது. ஆனால், நெல் தெரியவில்லை. நெல் காய்க்கும் மரம் எப்படி இருக்கும் என்று கேட்கிற அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களது தேவையை அவர்கள் பொருளாதார அளவில் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறதே தவிர, இது போன்ற அனுபவ கல்வியை எளிதாக கிராமத்து பள்ளி மாணவர்கள்தான் கற்றுக் கொள்கிறார்கள். கிராமத்துப் பள்ளி மாணவர்கள் விலங்கினங்கள் அத்தனையையும் சொல்கிறார்கள். அவைகளுக்குள் உள்ள வித்தியாசங்களை விளக்குகிறார்கள். ஒரு மீனை பற்றி கேட்டால் அத்தனை வகை மீன்களை பற்றியும் சொல்கிறார்கள். கண்ணக்கன்காடு பள்ளி மாணவர்கள் கிராமத்தில் கிடைக்கும் அத்தனை மூலிகைகளைப் பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் தெளிவாக விளக்குகிறார்கள். இங்குள்ள கண்காட்சியில் அனைத்தையும் சிறப்பாக காட்சிக்கு வைத்துள்ளனர். ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் உணவுகளில் சுவைக்காகச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் எந்தளவுக்கு உடலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று விளக்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடும் காற்று அடைக்கப்பட்ட உணவுப் பாக்கெட்டுகளில் அந்த ரசாயன நச்சுப் பொருள்கள் அதிகம் இருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment