"அரசு பொதுத்தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்றால் மட்டுமே, சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கும். இல்லை என்றால் சமூதாயத்தில் அங்கீகாரம் கிடைக்காது" என, வழிகாட்டும் நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் பேசினார். தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு
பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்ரல் 12ம் தேதி முடிவடைகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாவட்ட கல்வித்துறையினர் தீவிர முயற்சிகளை முடிக்கிவிட்டு, மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும், 100 சதவீதம் தேர்ச்சியை எட்டவும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தலைமையில், மாணவர் சந்திப்பு முகாம், நாமக்கல் தெற்கு அரசு பள்ளியில் நேற்று துவங்கியது. மாவட்ட கல்வி அலுவலர் திலகம் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தலைமை வகித்து பேசியதாவது: மார்ச், 27ம் தேதி துவங்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வில், 295 பள்ளிகள் பங்கேற்கிறது. அதில், அரசு, அரசு உதவி பெறும், 161 பள்ளிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளியை சேர்ந்த, 12 ஆயிரத்து, 939 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வை பொறுத்தவரை, தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகள், 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அரசு பள்ளிகள், 84 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றன. மாவட்ட மொத்த சதவீதம், 91. கடந்த ஆண்டு மாநில அளவில், நாமக்கல் மாவட்டம், 6வது இடம் பிடித்தது. மாணவ, மாணவியருக்கு முகவரியை பெற்றுத்தருவது எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுதான். அந்த தேர்வை, எப்படி எதிர் கொள்வது என்பதை விளக்கவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் மாவட்டத்தில் முதல் மாணவ, மாணவியராக வரவேண்டும் என்ற உத்வேகம், லட்சியம் இருக்க வேண்டும். இத்தேர்வில் சரியான மதிப்பெண் பெற்றால் மட்டுமே, சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கும். இல்லை என்றால் சமூதாயத்தில் அங்கீகாரம் கிடைக்காது.
இப்பருவத்தில் விளையாட்டு, "டிவி", சினிமா ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால், இன்னும், 15 ஆண்டுகளில் கழித்து தொலைந்து போனவர்கள் பட்டியலில் இடம் பெறுவீர். சாதனையாளர் பட்டியலில் இடம்பெற வேண்டுமா அல்லது தொலைந்து போனவர்கள் பட்டியலில் இடம் பெறவேண்டுமா, என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். லட்சியம் மற்றும் குறிக்கோள் இல்லாமல் தேர்வு எழுதினால், வாழ்க்கை தொலைந்து போகும். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்க மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment