Saturday, 22 December 2012

10ம் வகுப்பு தேர்வு - ஆங்கிலம் முதல் தாளில் குழப்பம்



            பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்விற்கான, ஆங்கிலம் முதல் தாளில் இரண்டு கேள்விகள் இடம் பெறாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு, தற்போது நடந்து வருகிறது. நேற்று நடந்த, ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், 42 மற்றும் 45 எண்களுக்கான கேள்விகள் இடம் பெறவில்லை;
பாடலின் இரண்டு வரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. அதற்கான கேள்வி இல்லாததால், மாணவர்கள் குழப்பமடைந்தனர். அந்த பிரிவில், ஐந்து கேள்விகளுக்கு, ஐந்து மதிப்பெண் என, குறிப்பிடப் பட்டிருந்தது. ஒரு சில பள்ளிகளில், தேர்வு கண்காணிப்பாளர்களாக இருந்த ஆசிரியர்கள், இந்த தவறை கண்டுபிடித்து, அதற்கான கேள்வியை எழுதிக் கொள்ளுமாறு மாணவர்களிடம் தெரிவித்தனர். இறுதித் தேர்வில், இதுபோன்று கேள்விகள் இடம்பெறாமல் இருந்தால், கண்காணிப்பாளர் எந்த பதிலையும் தெரிவிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு, கல்வித் துறையால் விதிக்கப்பட்டுள்ளது.
                           
திண்டுக்கல் எஸ்.எம்.பி., பள்ளி மாணவன் பிரின்ஸ்ராஜ் கூறுகையில், "கேள்வி இடம் பெறாததால், அதை விட்டு விடலாம் என்று நினைத்தேன். இருந்தாலும், ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டேன். சரியான கேள்வியை அவர் தெரிவித்ததால், அதற்கான விடையை எழுதினேன் ' என்றார். திண்டுக்கல் எஸ்.எம்.பி., பள்ளி ஆங்கில ஆசிரியை விஜயலட்சுமி கூறியதாவது: நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, இது போன்ற சூழ்நிலையில் என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து, அவர்களாகவே எழுதிக் கொள்வர். பிற மாணவர்கள் அதற்கான விடை தெரிந்தும், கேள்வி கேட்கப்படாததால் அதை எழுத வேண்டாம் என்று நினைத்தால், அவர்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
                                       
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறுகையில், "கேள்விகள் இடம்பெறவில்லை என்ற தகவல், என் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், விடை எழுதியிருக்கும் மாணவர்களுக்கு, அது தவறாக இருந்தாலும், முழு மதிப்பெண் வழங்கப்படும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை ' என்றார்
.

No comments:

Post a Comment