Sunday, 23 December 2012

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - எவ்வாறு வெல்லலாம்?



            மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், 2013ம் கல்வியாண்டு முதல் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. இத்தேர்வு, 2013, மே 5ம் தேதி நடத்தப்படவுள்ளது. இத்தேர்வைப் பொறுத்தவரை, பலவிதமான மாற்றங்கள், மாநிலங்களின் பங்கேற்பு, பிராந்திய மொழிகள் தொடர்பான பிரிச்சினை மற்றும்
தயாராவதற்கான குறுகிய காலம் போன்ற சிக்கல்களால், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் நிலைமை ஒன்றும் அவ்வளவு மோசமல்ல.
                               
இத்தேர்வுக்கான பாடத்திட்டமானது, பலவிதமான மாநில வாரியங்களின் பாடத்திட்டங்களை மதிப்பாய்வு செய்த பிறகே, CBSE, பள்ளிக் கல்வி வாரியங்களின் கவுன்சில் மற்றும் NCERT ஆகியவை இப்பாடத்திட்டத்தை தயாரித்துள்ளன. மருத்துவ கல்வியில், பல அம்சங்களையும் சேர்க்க வேண்டிய முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
அனைவரும் ஏற்கிறார்களா?
                            இந்த பொது நுழைவுத்தேர்வானது(NEET), மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள், அகில இந்திய பிஎம்டி தேர்வு மற்றும் தனிப்பட்ட முறையில் கல்லூரிகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றுக்கு பதிலாகவே நடத்தப்படுகின்றன. இத்தேர்வை ஏற்றுக்கொள்வதில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் உடன்படவில்லை என்றாலும், பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக்கொண்டு விட்டதாகவே கூறப்படுகிறது. MCI பட்டியலிட்டுள்ள மொத்தம் 271 மருத்துவக் கல்லூரிகள், 2013ம் ஆண்டின் NEET தேர்வின்கீழ் வருகின்றன. இக்கல்லூரிகளில், மொத்தம் 31,000 இடங்கள் உள்ளன.
கலந்துகொள்ளாத கல்வி நிறுவனங்கள்
                        AIIMS
என்ற நாட்டின் முதன்மையான மருத்துவக் கல்வி நிறுவனம், தனது உயர்தரத்தை பாதுகாக்கிறேன் என்று கூறி, இத்தேர்வில் கலந்துகொள்ள மறுத்துவிட்டது. பொதுவாக, மத்திய அரசின் உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தமக்கென தனி விதிமுறைகளை வைத்துள்ளன. எனவே, அவை இதுபோன்ற பொது நுழைவுத்தேர்வு முறைகளில் பங்கேற்பதில்லை.
தயாராதல்
                              இந்த புதிய நுழைவுத்தேர்வுக்கு தயாராவதில், மாணவர்கள், சில பல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. தங்களின் சில பழைய வழிமுறைகளை களைந்துவிட்டு, பல புதிய வியூகங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேசமயம், தெளிவான திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், இத்தேர்வானது, வெறும் மாணவர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இத்தேர்வை வெற்றிகொள்ளும் வகையில், மாணவர்களை தயார்செய்யும் பொறுப்பு, கல்வி நிறுவனங்களிடமும் உள்ளது என்பதை மறக்கலாகாது.
தேர்வின் வடிவம்
                            
உங்களின் திட்டமிடலை தெளிவாக மேற்கொள்ள, தேர்வு வடிவத்தை நன்கு அறிந்துகொண்டால்தான் முடியும். எனவே, அதைப்பற்றி இப்போது அறிந்துகொள்ளலாம். முந்தைய ஆண்டு வரை நடத்தப்பட்ட All India Pre - Medical Test -ல், மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகியவற்றில் தலா 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். மொத்தம் 3 மணிநேரங்கள் நடைபெறும் இத்தேர்வில், 1/4 என்ற அளவில் நெகடிவ் மதிப்பெண்களும் உண்டு. இந்த நெகடிவ் மதிப்பெண் முறை, இந்த NEET தேர்விலும் தொடரும். ஆனால், இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் தாவரவியல் ஆகிய பிரிவுகளில், தலா 45 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.
ஆலோசனைகள்
                            
இத்தேர்வை CBSE நடத்துவதால், NCERT புத்தகங்களை முழுமையாக, தெளிவாக படித்துவிட வேண்டும். கொடுக்கப்படும் எண்களை விரைவாக புரிந்துகொள்ள வேண்டும். NCERT புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து exercise -களையும் சிறப்பாக செய்து முடிக்கும் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வெழுதி முடிக்கும் பயிற்சியைப் பெற, மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் விடைகாண, நிமிட நேரத்திற்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதால், நிஜத் தேர்வை எழுதும் முன்பாக, குறைந்தபட்சம் 15-20 மாதிரித் தேர்வுகளை எடுத்துக்கொண்டு பயிற்சி பெறுவதே, உங்களின் இலக்கினை அடைய உதவும்.
                                 NEET -
யுடன் ஒப்பிடும்போது, CBSE -ல், 11 மற்றும் 12ம் வகுப்புகளின் பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் இருக்கும். எனவே, பாடத்திட்டத்துடன் ஒரு நெருக்கமான ஒப்பீட்டை, கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். பழைய AIPMT தேர்வுகளின் கேள்வித்தாள்களை எடுத்துப் பார்த்து, அதனடிப்படையில் பயிற்சி பெறுவதும் பயனளிக்கும்.
உங்களுக்கான உதவி
                          
மாணவர்களுக்கு, NEET தேர்வை எளிதாக்கும் வகையிலான வியூகங்களுடன், பல கல்வி நிறுவனங்கள் தயாராக களத்தில் உள்ளன. உதாரணமாக, கர்நாடக தேர்வுகள் அத்தாரிட்டி, இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், Capacity - building programme என்ற திட்டத்தை வைத்துள்ளது. பலவிதமான புதிய வழிமுறைகள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுடன், பல கோச்சிங் நிறுவனங்களும், களத்தில் தயாராக உள்ளன.
அன்றாட தயாரிப்புகள்
                        
எந்த செயலுக்குமே, திட்டமிட்ட கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. பாடத்திட்டம் மிகவும் விரிவானதாக இருப்பதால், உங்களின் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும். திட்டத்தை, ஒரு நாளுக்குரியது அல்லது ஒரு வாரத்திற்கு உரியது என்கிற ரீதியில் வகுத்துக் கொள்ளவும். அதன் முடிவில், உங்களது செயல்பாட்டின் வெற்றியை மதிப்பிட்டுக் கொள்ளவும். ஏதாவதொரு பாட அம்சம் உங்களுக்கு புரியவில்லை எனில், அதை உரியவர்களிடம் கேட்டுத் தெளிவுபெற தயங்க வேண்டாம். மேலும், பிரிவு வாரியாகவும் மாதிரி தேர்வைஎழுதி பயிற்சி பெறலாம். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கும் செல்லும் முன்பாக, உங்களின் முந்தைய நிலையின் பலவீனங்களை கண்டிப்பாக சரிசெய்து கொள்ள வேண்டும். படித்த பகுதிகளை, திரும்ப திரும்ப படித்துப் பார்ப்பது மிகவும் நல்லது. ஆலோசனைகளை சரியாக கடைபிடித்து, கடினமாக உழைத்தால், நீங்கள் மருத்துவராவது நிச்சயம்
.

No comments:

Post a Comment