Saturday, 22 December 2012

தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு



               பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விபரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்ய வேண்டும், என்ற தேர்வுத்துறை இயக்குனரின் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழைய முறையில் மாணவ, மாணவியர் விபரங்களை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும், எனவும் 
அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விபரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம்.
                                   
இம்முறை மாணவ, மாணவியர் விபரங்களை, இணையதளம் வழியாகப்ப திவு செய்யும்படி, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியரிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மின்தடை அதிக அளவில் உள்ளது. பள்ளி நேரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் உள்ளது. ஒரு மாணவனின் விபரங்களைப் பதிவு செய்ய, குறைந்தது பத்து நிமிடங்களாகிறது. மாணவனின் புகைப்படத்தை, கணினி ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மாணவர்களின் பிறந்த தேதி, 98ம் ஆண்டு ஜூன் மாதமாக இருந்தால், பதிவு செய்ய முடிகிறது. அகற்கு மேல் இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ, கணினி ஏற்றுக் கொள்வதில்லை.
                                            
எனவே, தேர்வுத்துறை இயக்குனர் கூறியபடி, ஜனவரி மாதம் நான்காம் தேதிக்குள், அனைத்து மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வது சிரமம். மேலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மாணவ, மாணவியரின் விபரங்கள், பழைய முறைப்படி குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. அவற்றை மீண்டும் இணையதளத்தில் பதிவு செய்ய காலதாமதமாகும். எனவே, பிளஸ் 2 தேர்வுக்கு அனுமதித்தது போல், பழைய முறையை பின்பற்றி, திருத்தங்களை மட்டும் இணையதளம் மூலம் மேற்கொள்ள, தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
.

No comments:

Post a Comment