சிவகங்கையில், கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள், பள்ளி மாணவியரிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது தொடர்வதால், மாணவியரின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, கவுன்சிலிங் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை
அருகே, அனுமந்தங்குடி பள்ளியில் பணிபுரியும், உடற்கல்வி ஆசிரியர் வேதமாணிக்கம், விவசாய ஆசிரியர் சீனிராஜ், மறவமங்கலம், அரசு பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் விசுவநாதன், ஆரோக்கிய பரிபூரணம், திருப்புவனம், கீழடி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் என, சில்மிஷத்தில் ஈடுபட்ட, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தவிர, மேலும் பல பள்ளிகளில் சில்மிஷ ஆசிரியர்களின் சேட்டையால், ஒட்டுமொத்த ஆசிரியர்களும், அவமதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், சில்மிஷ ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்பது, பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து, உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன் கூறுகையில், "மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர்களால், தொடர்ந்து பிரச்னை எழுவதைத் தடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆலோசனை வழங்க உள்ளார். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மனநல நிபுணர்கள் மூலம், கவுன்சிலிங் தர உள்ளோம். தவறு செய்த ஆசிரியர்கள் மீது, துறை நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றார்.
ஆசிரியர் பயிற்சி நிறுவன, உளவியல் துறை பேராசிரியர் ராமராஜ் கூறியதாவது: மற்ற பாட ஆசிரியர்களை விட, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நேரம் குறைவு. விளையாட்டு என்ற பெயரில் மாணவியரை வெளியில் அழைத்துச் சென்று, இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து, கவுன்சிலிங் கட்டாயம் நடத்த வேண்டும்; அனைத்து ஆசிரியர்களுக்கும், உளவியல் ரீதியான, பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். பெற்றோர்கள் சிலர் கூறுகையில், "வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. எதிர்கால கனவோடு பள்ளிக்கு செல்லும் மாணவியருக்கு, சில ஆசிரியர்களால் தொந்தரவு ஏற்படுகிறது. இது போன்ற ஆசிரியர்களுக்கு, கடும் தண்டனை விதிக்க வேண்டும்; அப்போது தான் நல்ல சமுதாயம் உருவாகும்" என்றனர்.
No comments:
Post a Comment