Monday 7 January 2013

அரையாண்டு தேர்வு: வினாத்தாள் வெளியானதால் தள்ளிவைப்பு



           அரையாண்டு வினாத்தாள் வெளியான சம்பவம் குறித்து அதிகாரிகள் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளில் நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் தயாரிக்கப்படும் வினாத்தாள் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு "சிடி"யாக அனுப்பி வைக்கப்படும். கேள்வித்தாள் கன்வீனர் வசம் ஒப்படைக்கப்படும். இதனை கேள்ளவித்தாள் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அச்சிட்டு கட்டு கட்டாக வைக்கப்படும்.
                                 தேர்வுக்கு முந்தைய நாள் இந்த வினாத்தாள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வினாத்தாள் அச்சிடுவது ரகசியமாக வைத்திருக்கப்படும். வினாத்தாள் சிவகாசி பகுதியில் இருந்து தான் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் உள்ள வினாத்தாள் மையங்களை முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார். வினாத்தாள் மையங்களில் இருந்து வினாத்தாள் வெளியாகவில்லை. ஈரோடு மாவட்டத்தில் இருந்து சிவகாசிக்கு வினாத்தாள் அச்சிட கொடுத்துள்ளனர்.  அந்த வினாத்தாள் தான் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தினர் தான் அச்சிட கொடுத்த அச்சகத்தில் இருந்து கேள்வித்தாள் வெளியேறியதா, அங்கிருந்து சிவகாசி பகுதிக்கு வந்ததா என்பது குறித்து இனிமேல் தான் தெரியவரும்.
                              முதன்மை கல்வி அதிகாரி பகவதி கூறுகையில், "விருதுநகரில் இருந்து வினாத்தாள் வெளியாகவில்லை. வெளியான வினாத்தாளை வைத்து தேர்வு நடத்த முடியாது. நாளை நடக்கவிருக்கும் தேர்வு தள்ளி வைக்கப்படும், புதிய வினாத்தாளில் தான் தேர்வு நடக்கும். வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். அரையாண்டு பொது தேர்வு நடந்த அத்தனை வினாத்தாள்களும் சிவகாசியில் வெளியாகியுள்ளது. அச்சகங்கள் இங்குள்ளதால் இங்கு அச்சிட வரும் வினாத்தாள்களை வெளியில் கொடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பிளஸ் 2 வினாத்தாள்களும் வெளியாகியுள்ளது. வினாத்தாள்கள் வெளியில் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அனைத்து தேர்வுகளும் வினாத்தாள் வெளியான பின்பே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 மாணவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட வேண்டும்.  பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment