Tuesday, 1 January 2013

முழுமையான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஜனவரி இறுதிக்குள் வெளியீடு



                              முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் முழுமையான தேர்வுப் பட்டியல் ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண், ஜாதி மற்றும் பிறந்த தேதி விவரங்களும், தேர்ந்தெடுக்கப்படாதவர்களுக்கு,
தேர்ந்தெடுக்கப்படாததற்கான காரணமும் இந்தப் பட்டியலுடன் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தனதாவரவியல் பாட ஆசிரியர்கள் 204 பேர் உள்பட தகுதியான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய இரண்டாவது தேர்வுப் பட்டியலும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
                           2,890
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே மாதம் நடைபெற்றது. நீதிமன்ற வழக்குகள், சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் போன்றவற்றால் 2,300 பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டது. தாவரவியல் ஆசிரியர்கள், தமிழ் வழி முன்னுரிமை கோரும் பணி நாடுநர்கள் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இவர்களுக்காக சுமார் 600 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
புதிதாக பணி நியமனம் பெற்ற 2,300 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடக் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
              தாவரவியல் ஆசிரியர்கள் உள்பட தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு திங்கள்கிழமை நேரில் வந்தனர். பணி ஆணை பெற்றும் பட்டியலில் இடம்பெறவில்லை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காதர் என்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிறகு, அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 103 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதாகவும், ஆனால், பணி நியமன ஆணை வழங்கிய பிறகு இப்போது தகுதி பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
            பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 5 இடங்களில் 4 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஐந்தாவது இடத்தையும் நிரப்பினால் நான் தேர்வுப் பட்டியலில் இடம்பெறுவேன் என்று அவர் தெரிவித்தார். ஜனவரி இறுதியில் வெளியிடப்படும் இறுதிப்பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தாவரவியல் தாமதம் ஏன்? எம்.எஸ்சி., (தாவரவியல்) படிப்புக்கு இணையான படிப்பாக எம்.எஸ்சி., (தாவர உயிரியல்), (தாவர உயிரி தொழில்நுட்பவியல்) ஆகிய படிப்புகளைக் கருதி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
            உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், தாவரவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தாவரவியல் ஆசிரியர்கள் தெரிவித்தனர். எங்களுடன் தேர்வு எழுதியவர்கள் ஜனவரி 2-ம் தேதிக்குள் பணி நியமனம் பெற்றுவிடுவார்கள். எங்களது பதவி உயர்வு போன்றவை பாதிக்கப்படும். விரைவாக தாவரவியல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
போட்டித் தேர்வு எழுதியவர்களில் மேற்கண்ட படிப்புகளை முடித்தவர்கள் இருந்தால், அவர்களையும் தாவரவியல் பாட ஆசிரியர் பணிக்குப் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த நியமனத்துக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த மாதத்துக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு தாவரவியல் பாட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சிப் பள்ளிகள், சீர்மரபினர் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதுநிலை ஆசிரியர்களும் இரண்டாவது பட்டியலில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. விடுபட்டுள்ள ஓரிரு தகுதியான ஆசிரியர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. தமிழ் வழி முன்னுரிமை கோரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் சான்றிதழ் முழுமையாக சரிபார்க்க வேண்டியுள்ளதால், அந்த நியமனம் மட்டும் சற்று தாமதமாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
.

No comments:

Post a Comment