Monday 18 March 2013

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அனுமதி



             வாடகை கட்டடங்களில் இயங்கும், 44 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு, 35 கோடி ரூபாயில், சொந்தக் கட்டடம் கட்ட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்
துறையின் கீழ், 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 42 பழங்குடியினர் விடுதிகளும் உள்ளன. மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பால், வாடகை கட்டடங்களில் இயங்கும் விடுதிகளில், அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு, வாடகை கட்டடங்களில் இயங்கும் அனைத்து விடுதிகளுக்கும், சொந்த கட்டடங்கள் கட்டப்படும் என, அரசு அறிவித்தது. அதன்படி, இந்தாண்டு வாடகை கட்டடங்களில் இயங்கும், 44 ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விடுதிகளுக்கு, மொத்தம், 35.04 கோடி ரூபாய் செலவில், சொந்த கட்டடம் கட்ட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதில், மலைப் பகுதிகளில், விடுதி ஒன்றுக்கு, 88.53 லட்சம் ரூபாய் செலவில், 50 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட மூன்று விடுதிகளும், மற்ற பகுதிகளில், 78.99 லட்சம் ரூபாய் செலவில், 50 மாணவர்கள் தங்கும் வசதியுடைய, 41 விடுதிகளும் கட்டப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment