ஆசிரியர்கள் நியமனம் முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக் கோரி ஐகோர்ட்டு கிளையில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீசு அனுப்ப
உத்தரவிட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் இஸ்மாயில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘’மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-11-ம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் 129 பேர் பணி நியமனம் செய்யப் பட்டுள்ளனர். நியமனத்தின் போது சட்டவிதிகள் முறையாக பின்பற்றப்பட வில்லை. யு.ஜி.சி. விதிகளும் கடை பிடிக்கப்படவில்லை. மேலும் முறைப்படி 10, பிளஸ்-2, டிகிரி படிக்காதவர்கள் நிறையபேர் பணியில் சேர்ந்துள்ளனர்.
சம்பந்தப் பட்ட துறையில் அதற்கு தொடர்பில்லாத படிப்பு படித்தவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையும் பின்பற்றவில்லை. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க தமிழக அரசு ராமன் கமிட்டியை அமைத்தது. ஆனால் 10 மாதங்கள் ஆகியும் எந்த விசாரணையும் மேற் கொள்ளவில்லை. எனவே மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து சி.பி. சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பதிலளிக்குமாறு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கும், முன்னாள் துணைவேந்தர் கற்பக குமாரவேலுக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment