"மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், ஆர்.சி.பள்ளி பல சமய உரையாடல் மன்ற அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். விடைத்தாள் திருத்த தனி கட்டடம் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு பதவி உயர்வு அளிக்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேல்நிலைக் கல்வியில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் அக மதிப்பீட்டு மதிப்பெண் முறையை அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் முதுநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, பணியிடை பயிற்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரை மையமாக கொண்டு, புதிய கல்வி மாவட்டத்தை உருவாக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அலகு விட்டு அலகு பணி இடமாறுதலுக்கு வழிவகை செய்ய வேண்டும். கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வியிலும் 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment