வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, ஆயிரக்கணக்கில் பண மோசடி செய்யும் தனியார் வேலைவாய்ப்பு (இடைநிலை) நிறுவனங்களால், பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கல்வி நகரம் என்றழைக்கப்படும் கோவையில் 60க்கு
மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளும், 40க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பட்ட படிப்பு, பட்டமேற்படிப்பு முடித்து வெளிவருகின்றனர். இவர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில், இறுதியாண்டு படிக்கும் போது கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வழங்க, சிறந்த கல்வி நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர்.ஆனால், கல்வியில் சிறந்து விளங்கினாலும், தகவல்தொடர்பு, ஆளுமை உள்ளிட்ட திறன்கள் குறைபாடு காரணமாக பலர் வேலைவாய்ப்பு பெற முடியாமல் தவிக்கின்றனர். இவர்களிடம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகம், பல்கலைகள், தனியார் கல்லூரிகள் சார்பில் இலவசமாக நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி, சில தனியார் இடைநிலை நிறுவனங்களை நம்பி ஏமாந்து வருகின்றனர். இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் ஜோதிமணி கூறியதாவது: மாதம் தோறும் இரண்டாவதுவெள்ளிக்கிழமைகளில், கவுண்டம்பாளையம், சேரன்நகரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. முகாம்களில் பங்கேற்று தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றால், அரசு வேலை கிடைக்காது என ஒரு சிலர் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும் என்றார். பாரதியார் பல்கலை வேலைவழிகாட்டித்துறை தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது: பல்கலை, கல்லூரிகள் சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. முகாமில், போட்டித்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் தேர்வு பெறுவோருக்கு அன்றைய தினமே வேலைவாய்ப்பு கடிதங்கள் வழங்கப்படும். தனியார் வேலைவாய்ப்பு இடைநிலை நிறுவனங்கள் பல்கலை, கல்லூரிகளுக்கு வருவதில்லை. தனியார் நிறுவனங்களுடன் இவர்கள் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ளாத காரணத்தால், நம்பகத்தன்மை மிகவும் குறைவாகும். இத்தகைய நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் முகாம்களில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களின் குறித்து, வலைதளங்களின் தெரிந்து கொள்ளலாம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தூதரக, துணை தூதரக அலுவலகங்களில் வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு மேன்பவர் கார்ப்பரேஷன் மற்றும் மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுதவிர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வலைதளத்திலும் வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, ஜெயக்குமார் தெரிவித்தார். வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள், பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
No comments:
Post a Comment