Wednesday, 24 April 2013

வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்



                     கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால், கடந்த காலங்கள் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் இல்லை என்றால், நிகழ்காலம் கூட இறந்த காலமாய் மாறிவிடும். புத்தகங்கள் உயிரற்ற காகித குவியல்கள் அல்ல;
உயிர்ப்போடு வாழும் மனித மனங்கள். நம்மோடு எப்போதும் இருக்கும், கேள்வி கேட்காத, விடை விரும்பாத ஆசிரியர்கள். "எனது வாழ்க்கையை புரட்டியது புத்தகம் தான்", என சொல்வோர் பலர். ஆயுதத்தின் வலிமையை விட, சக்தி வாய்ந்த இந்த புத்தகங்கள், சமூக மாற்றத்திற்கான திறவுகோல். புத்தகத்தை, அன்றாடம் தங்கள் வாழ்வில் ருசிக்கும் சிலரது பக்கங்கள்...
                        
படிக்காத நாளில்லை: மதுரையை சேர்ந்த பேராசிரியை நிர்மலா மோகன். 22 புத்தகங்களின் ஆசிரியர். இவரது கணவர் முனைவர் இரா.மோகன் எழுத்தாளர், பேச்சாளர். இவரது வீட்டின் ஒவ்வொரு அறையையும், புத்தகங்கள் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன. பள்ளியில் படிக்கும் போதே, புத்தகத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், புத்தகங்கள் மீது தீராத காதல் ஏற்பட்டது, முதுகலை தமிழ் படிக்கும் போது தானாம். வங்கியில் பணிபுரிந்து வந்த போது, "மேடம் கியூரி" புத்தகத்தை படித்த போது தான், ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும், என்ற ஆர்வம் இவரை எழுத்தாளராக மாற்றியது. பெண்கள் எந்த துறையில் சாதித்திருந்தாலும், அவர்களை குறித்து படிக்க தவறுவதே இல்லை. சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க மறப்பது இல்லை, என்பதற்கேற்ப, ஒரு நாள் கூட படிக்காத நாள் இல்லை, என்கிறார் நிர்மலா மோகன்.
                            ""
வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு - இது தான் புத்தகம். அதில் அதிக நேரம் செலவு செய்யும் போது மனம் நிறைந்த மகிழ்ச்சி கிடைக்கும்,&'&' என்கிறார். இவருடன் பேச 94436 75931. சிறையில் சுவாசித்த புத்தகம்: மதுரை அண்ணாநகரில் வாடகை நூல் நிலையம் நடத்தி வருபவர் பி.ஆர்.ரமேஷ். பதிப்பாளர், எழுத்தாளர் இது தான் பி.ஆர்.ரமேஷின் தற்போதைய அடையாளம். 6ம் வகுப்பு படித்த இவர், 3 ஆண்டுகள் குண்டாஸ் கைதி. 6 ஆண்டுகள் விசாரணை கைதி. 23 வழக்குகளில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டவர். 17 வயதில் ரவுடியான, இவரது தலைமையில், இருதரப்புகளில் நடந்த மோதல்களில் 23 கொலைகள். "என்கவுண்டர்" பட்டியலில் தப்பி, அனைத்து வழக்குகளிலும் விடுதலை பெற்று, புத்தகங்களோடு தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

                                     தன் வாழ்க்கையை மையமாக வைத்து, இவர் எழுதிய "தொலைந்த நேரங்கள்" உட்பட 5 புத்தகங்களை தொடர்ந்து, அச்சில் ஏற 3 புத்தகங்கள் காத்திருக்கின்றன. "சிறை தான் எனது அறிவுக்களம். மதுரை மத்திய நூலகத்திலிருந்து யாரும் விரும்பாத புத்தகங்கள் தான் சிறைக்கு வரும். அவற்றையும் ஆர்வமாய் படிப்பேன். எல்லோரும் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக, வாடகை நூல் நிலையத்தை நடத்தி வருகிறேன். என் வாசமும், சுவாசமும் புத்தகங்களே," என்கிறார். இவரோடு பேச 96596 16669. ஒரு புத்தகம் படிக்க 100 ரூபாய்: திண்டுக்கல் தீயணைப்புத் துறை கண்காணிப்பாளர் ஏகாம்பரம், 46. மதுரை புதூரில் உள்ள இவரது வீட்டில் பீரோ, பரண் என எங்கும் புத்தகங்களின் குவியல்கள். 10 ஆயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகம். 100க்கும் மேற்பட்ட திருக்குறள் விரிவுரையை சேகரித்து உள்ளார். பள்ளிப் பருவத்தில் துவங்கிய புத்தகக் காதல் இன்று வரை தொடர்கிறது. "பொது அறிவுக்காக படிக்கத் துவங்கினேன். அதன் பின் அதுவே பழக்கமாகி விட்டது. நாகூர் ரூமியின் "அடுத்த வினாடி" புத்தகம் என்னை பெரிதும் ஈர்த்துவிட்டது. மாதம் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்குகிறேன். எனது சொத்து புத்தகங்களே. அதை வைத்து நீங்கள் முன்னேறும் வழியை பாருங்கள் என, பிள்ளைகளிடம் சொல்வேன்" என்கிறார்.
                           
இவரது மகன் பி.., முதலாம் ஆண்டு, மகள் 8ம் வகுப்பு படிக்கின்றனர். இவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த, ஒரு புத்தகத்தை படித்து அதை இவரிடம் சொன்னால், 10 ரூபாய் கொடுத்து ஊக்குவித்துள்ளார். இப்போது 100 ரூபாய் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி, நல்ல வாசிப்பாளர்களாக உருவாக்கியுள்ளார். இவரிடம் பேச 98430 36765.  கதை கதையா படிப்பேன்: மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த மாணவி விஷ்வாதிகா,10. ஜீவனா பள்ளி மாணவி. பள்ளி பாடத்தை விட, அதிகம் படிப்பது கதை புத்தகங்கள். சிறுவர்களுக்கான எந்த புத்தகம் இருந்தாலும் அதை விடுவதே இல்லை. வீட்டில் புத்தகம் வாங்குவதற்காகவே ஒரு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது
                        "சார்லஸ் டிக்சன் கதைகள் ஸ்வீட் மாதிரி. பள்ளி பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மாதிரி, நூலக புத்தகங்களை படிப்பேன்" என்கிறார். கம்ப்யூட்டரில் கூட டேட்டாக்களை பதிவு செய்யும் போது "மெமரி" நிறைந்து விட்டதாக காட்டும். ஆனால் புத்தகங்களை படிக்க, படிக்க மனித மூளை மட்டும், இன்னும் இன்னும் என ஆர்வமாய், புதிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் பயன் தந்து கொண்டிருக்கும்.  நம்மை நாமே மேம்படுத்த, புத்தகங்களை படியுங்கள். குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசாக வழங்குங்கள். குழந்தைகளிடம், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்போம். இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்: உலகில் வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த சொத்துகளை, பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஏப்., 23ம் தேதி, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.
                              
புத்தகம் மற்றும் நூலாசியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. புத்தகம் என்பது கல்வி மற்றும் அறிவை வளர்க்க, உலகிலுள்ள பல்வேறு கலாசாரம் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு உறுதுணையாக உள்ளது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் நமது அறிவை வளர்க்கலாம். மனிதர்களை நல்வழிப்படுத்தவும் புத்தகம் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. சிறந்த புத்தகங்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்; அப்போதுதான் அனைத்து தரப்பினரையும் அது சென்றடையும்.
                                   
எப்படி வந்தது: ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், இன்கா கார்சிலாசோ போன்ற சர்வதேச புகழ்பெற்ற இலக்கியவாதிகள் 1616, ஏப்., 23ல் மறைந்தனர். இலக்கியத்தில் இவர்களது பங்களிப்பை போற்றும் வகையில், இவர்களது மறைந்த நாளையே, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ உருவாக்கியது. யுனெஸ்கோ விருதுமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம், புத்தகங்கள் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தி, இலக்கியத்தில் அவர்களது பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும். உலகில் சகிப்புத்தன்மை வளர்வதற்கு இலக்கியம் மூலம் பங்காற்றிய, சிறந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, யுனஸ்கோ அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது
.

No comments:

Post a Comment