மாநில அரசுப் பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை, மத்திய அரசுப் பணிக்காக நியமிப்பதில் மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கொள்கைகள், அரசுப் பணியாளர்களை பாதிக்கும் வகையில் இருப்பதாக முதல்வர்
ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்:
மாநில அளவில் பல்வேறு அரசுப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சிறப்பாக பணியாற்றும், அதிக திறன் பெற்றவர்கள் சிறப்பு பதவி உயர்வு என்ற அடிப்படையில், மத்திய அரசுப் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இதனை தடுத்து, அவர்களும், மத்திய அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வினை எழுதியே மத்திய அரசுப் பணிக்கு வர வேண்டும் என்பது, பல திறன் மிக்க அதிகாரிகளின் திறனை முடக்கும் விதத்தில் அமையும். அவர்கள் தங்களது பணித்திறனில் கவனம் செலுத்தாமல், தேர்வுக்கு கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.ஒருவர் தனது செயல் திறன் மூலம், தனது திறமையை நிரூபித்த பிறகு, அவர் எதற்காக தேர்வெழுதி திறனை நிரூபிக்க வேண்டும். இது அரசுப் பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையே பணியாளர்கள் மத்தியில் இருந்து நீக்கிவிடும். அதேப்போல, மாநில அரசுப் பணியில் இருந்து மத்திய அரசு பணிக்கு வருபவர்களுக்கு இதுவரை இருந்த அதிகபட்ச வயது தகுதி 54ல் இருந்து 40 ஆகக் குறைக்கப்படுவதும், தன் முனைப்போடு மாநிலத்துக்காக ஊழைத்து வரும் அரசு அதிகாரிகளை செயல் இழக்க வைக்கும். இதற்கு தமிழக அரசு ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தெரிவிக்கும். எனவே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் கொண்டு வந்துள்ள இந்த பரிந்துரைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்ற பழைய முறைகளையே பயன்படுத்தி மத்திய அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment