Wednesday, 30 October 2013

10ம் வகுப்பு தமிழில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கேட்கும் தமிழாசிரியர்கள்


                         "மாநில அளவில் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பை தடுக்க வினாத்தாளில் மாற்றம் தேவை" என, தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. மாநில துணைத் தலைவர் இளங்கோ கூறியதாவது: "சமச்சீர் கல்வித் திட்டத்தில் பொதுத்தேர்வு
தமிழ் பாடத்திற்காக வடிவமைத்த புதிய வினாத்தாள் கடினமாக உள்ளது. இதனால் தோல்வி விகிதம் அதிகரித்துள்ளது. பழைய முறையில் ஏழு மதிப்பெண் நெடுவினாக்களில் செய்யுள், உரைநடை பகுதியில் நான்கு கேட்கப்பட்டு இரு வினாவிற்கு விடையளித்தால் போதும். புது முறையில் செய்யுள், உரைநடை பகுதியில் தலா இரு வினாக்கள் கேட்டு ஒரு வினாவிற்கு எட்டு மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வினாக்கள் குறைவால், விடையளிக்க திணறுகின்றனர்.

                           இரண்டாம் தாளில் பழைய முறைப்படி இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், பிரித்து எழுதுதல், பிழை திருத்தம், பிற மொழி சொற்களை நீக்குதல் என தனித்தனி தலைப்பில் இரண்டு மதிப்பெண் வினாக்கள் மூன்று இடம் பெறும். வாக்கிய மாற்றம் தலைப்பில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஏழு கேட்கப்படும். தற்போது இவை அனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக்கி 20 கேள்வியாக மாறியுள்ளன. சிலர் 10 வினாக்களுக்கு மட்டுமே விடையளிப்பதால் மதிப்பெண் குறைந்து தோல்வி அதிகரிக்கிறது. புதிய வினாத்தாளில் மாற்றம் செய்து எளிமையாக்க வேண்டும். பிளஸ் 2 வில் தமிழ் பாடத்திற்கு "பேசுதல், கேட்டல் திறனுக்கு" 20 மதிப்பெண் அளிப்பது போல 10ம் வகுப்பிற்கும் வழங்க வேண்டும்." இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment