Friday 25 October 2013

சேதமடைந்த கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு: 49 பள்ளிகளின் பட்டியல் தயார்


           கோவை மாவட்ட பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க, 49 பள்ளிகளின் பெயர் பட்டியல் பொதுப்பணித்துறையிடம் மாவட்ட கல்வித்துறையால் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், பருவமழையின் தாக்கம் துவங்கியுள்ளதால் பள்ளி
மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் தேவை என்று பள்ளிக் கல்வித்துறையால் தலைமையாசிரியர்களுக்கு கடந்த வாரம் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும், சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை எடுப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது பணித்துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நேற்று பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்தது.
                     முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, எஸ்.எஸ்.., கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி லத்திகா, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில், சேதமடைந்துள்ள பள்ளிகள் விபரம், இடிக்கப்படவேண்டிய கட்டடங்களின் விபரம், புதிய கட்டடங்கள் அமைத்தல் போன்ற தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேதமடைந்த பள்ளிகளையும், அதில் இடிக்கப்படவேண்டிய கட்டடங்களையும் பொது பணித்துறை (கட்டடம்) செயற் பொறியாளர்கள், கல்வித்துறை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
 முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "ஆய்வுக் கூட்டத்தில், தற்போது இடிக்கப்படவேண்டிய 49 பள்ளிகளில் உள்ள சேதமடைந்த கட்டங்களின் விபரங்களை சமர்ப்பித்துள்ளோம். ஆய்வுகளை தொடர்ந்து இப்பணிகள் துவங்கும். மேலும், பள்ளிக் கல்வித் துறையால் தற்போது பள்ளிகள் பராமரிப்புக்கு 1.5 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி, பள்ளிகளின் தேவையை பொறுத்து, பிரித்து கொடுக்கப்படும். குறிப்பாக, குடிநீர் வசதி, கழிவறை, போன்ற அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment