Saturday 26 October 2013

கூடுதல் வேலை நாட்களிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும்.



             நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் கூடுதல் வேலை நாட்களில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.அரசு,  அரசு உதவிபெறும்பள்ளிகளில் தொடக்கக் கல்வித்துறை முதல் உயர்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மதியம்
சத்துணவு வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்கள்தவிர மற்ற அனைத்து நாட்களிலும் சத்துணவு வழங்கப்படுகிறது.மாணவர்களின் கல்வி நலன் கருதியும், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் நடப்பு கல்வியாண்டில் 8 விடுமுறை நாட்களை வேலை நாட்களாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதன்படி, 2013 ஜூன் 22, ஜூலை 27, ஆக.17, அக். 26, நவ.,30, டிச.,14, 2014 ஜன.,18, மார்ச் 1 ஆகிய 8 சனிக்கிழமைகள் ஆகும். இது வரையிலான வேலை நாட்களில் மாணவர்கள் மதியம் சத்துணவு வழங்கப்படவில்லை.இது குறித்து ஆசிரியர் சங்கத்தினர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வேலை நாட்களில் மட்டுமே சத்துணவு அளிக்க உத்தரவு உள்ளதாகவும், இது தவிர்த்து பிற நாட்களில் வேலை நாட்களாக இருந்தாலும் சத்துணவு அளிக்க நிதி ஒதுக்கீடு கேட்க முடியாது எனவும் கூறுகின்றனர்.மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிக்கல்வித்துறையே அறிவித்த வேலை நாட்களில் மாணவர்களுக்கு சத்துணவு அளிப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித்துறைக்கோ, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கோ எடுத்துச் செல்லாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், புதிய நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கும்போது சத்துணவு வழங்குவது பற்றிய உத்தரவையும் வழங்கி இருக்க வேண்டும். கூடுதல் வேலை நாட்களில் பள்ளிக்களுக்கு செல்லும் எத்தனையோ மாணவர்கள் மதிய உணவின்றி கல்வி பயலும் நிலை சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டத்தில் நிலவுகிறது. இனிமேலாவது சனிக்கிழமை பள்ளி வேலை நாளில் சத்துணவு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.சத்துணவு திட்ட அரசு அலுவலர்கள் கூறுகையில், "தொடக்கக் கல்வித்துறைக்கு ஆண்டுக்கு 220 வேலை நாட்களும், உயர்நிலை பள்ளிகளுக்கு 200 நாட்களும் உத்தரவில் உள்ளது. இந்த நாட்களுக்கு மட்டுமே சத்துணவு நிதி அளிக்கப்படுகிறது. தவிர்க்க முடியாமல் சில உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக வேறொரு நாட்களில் பள்ளிக்கூடம் நடந்தால் சரிக்கட்டிவிடுவோம்.இவ்வாண்டு கூடுதலாக 8 நாட்களை அதிகரித்துள்ளதற்கு சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை. கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை கடிதம் வந்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம்," என்றனர்.

No comments:

Post a Comment