தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு, எத்தனை சதவீத வட்டி என்பது, வரும் 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ளோருக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படும். இந்த நிதியை,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருகிறது. இதிலுள்ள, உயர்மட்ட அமைப்பான, அறங்காவலர்கள் மத்திய வாரியம்
தான், முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும். இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளோருக்கு, எத்தனை சதவீதம் வட்டி வழங்குவது, திரட்டப்பட்டுள்ள நிதியை எதில் முதலீடு செய்யலாம் ஆகியவை குறித்து, இந்த வாரியம் தான் முடிவு செய்யும். இதற்கான, அறங்காவலர்கள் மத்திய வாரியத்தின், 201வது கூட்டம், ஜனவரி 15ம் தேதி, மும்பையில் நடக்கிறது.
பி.எப்., வட்டிவிகிதம்: இக்கூட்டத்திற்கு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமை தாங்குவார். இதில், பி.எப்., டெபாசிட்டுக்கு, இந்த நிதியாண்டிற்கான வட்டி விகிதம் குறித்து முடிவு செய்யப்படும். பின், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பபடும்.தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், நாடு முழுவதும், ஐந்து கோடி பேர் உள்ளனர். வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வட்டாரங்களில் கிடைத்த தகவல் படி, 8.6 சதவீதம் வட்டி வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.இருப்பினும், தொழிலாளர்கள் அமைப்புகள், 8.8 சதவீத வட்டி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. கடந்தாண்டு, 8.25 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.அறங்காவலர்கள் வாரிய குழுவில் உறுப்பினர்களாக உள்ள இந்துஸ்தான் மஸ்தூர் சபா செயலர் நாக்பால் கூறுகையில்,""வங்கிகளில் செய்யப்படும் டிபாசிட்டுகளுக்கு, தற்போது, 9 சதவீதம், 10 சதவீதம் வரை தரப்படுகிறது. இந்நிலையில், பி.எப்., சந்தாதாரர்களுக்கு, 9.5 சதவீத வட்டி வழங்க வேண்டும் என, வலியுறுத்துவோம்,'' என்றார்.
No comments:
Post a Comment