பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான காலக்கெடு இன்று 31ம் தேதியுடன் முடிகிறது. அடிப்படை வசதிகளை இதுவரை பூர்த்தி செய்யாத 1000 தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் இயங்குமா
என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மாநகர எல்லை எனில் 6 கிரவுண்டு நிலத்தில் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். டவுன் பஞ்சாயத்து எனில் ஒரு ஏக்கர் நிலத்திலும், கிராம பஞ்சாயத்து எனில் 3 ஏக்கர் நிலத்திலும் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். மாணவ, மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை, விளையாட்டு மைதானம், ஆசிரியர் மாணவர் விகித அடிப்படையில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இருத்தல் வேண்டும் என்று அனைவருக்கும் கட்டாய கல்வி மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு உத்தரவிட்டது.இந்த அடிப்படை வசதிகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் கட்டாயமாக செய்ய வேண்டும். தவறினால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கான காலக்கெடு மார்ச் 31 என்றும் அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு மார்ச் 31ம் தேதிக்குள் வசதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. ஆனால், 1000 தனியார், மெட்ரிக் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. கல்வித் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த பள்ளிகள் வரும் கல்வியாண்டில் இயங்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஏனெனில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை பூர்த்தி செய்யவில்லை எனில், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1 லட்சம் அபராதம், அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே இன்று வரை அடிப்படை கட்டமைப்பை பூர்த்தி செய்யாத பள்ளிகள் மீது இந்த நடவடிக்கை பாயும் என்பதால் ஆயிரம் பள்ளிகள் இயங்குமா, அதில் தற்போது பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment