தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2013-14ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை முதல் தேதி துவங்குகிறது. இக்கல்வியாண்டில் 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை துணைவேந்தர்
ராமசாமி தெரிவித்தார். பல்கலை துணைவேந்தர் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பல்கலையில் சேர்வதற்காக மாணவர்களின் மத்தியில் கடும் போட்டிகள் நிலவுகிறது. மாணவர்களின் நலன் கருதி தற்போது 12ம் ஜந்தாண்டு திட்டத்தின் கீழ் பல்கலை அரசு கல்லூரிகளில் 10 சதவீதம் மாணவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
மேலும், இந்தாண்டு முதல் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற பாடத்தை தேர்வு செய்து படிக்க 20 முதல் 30 சதவீத வாய்ப்புகள் வழங்கப்படும். பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகள் அனைத்திலும் ஒரே விதமான வசதிகள், பாடத்திட்டங்கள், சோதனை கூடம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாணவர்கள் வெளி மாநில வேளாண் கல்லூரிகளில் ஒரு பருவம் முதல் நான்கு பருவங்கள் வரை பயில புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவிகரமாக அமையும். 2013-14ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் மே மாதம் 6ம் தேதி முதல் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, துணைவேந்தர் ராமசாமி கூறினார்..
No comments:
Post a Comment