தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், பொது, சிறப்பு மருத்துவர் மற்றும் பல் மருத்துவர்களுக்கான தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால், மருத்துவர்கள் அவதிப்படுகின்றனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் 2,159 உதவி அறுவை
சிகிச்சை நிபுணர்கள் தேர்வுக்கான அறிவிப்பை, மார்ச் 31ம் தேதி, தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பொது மருத்துவ பிரிவில் 911 இடங்களும், சிறப்பு மருத்துவ பிரிவில் 1,163 இடங்களும், பல் மருத்துவ பிரிவில் 85 இடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மே 12ம் தேதி தேர்வு நடக்கும் எனவும் வாரிய இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.இதைப் பார்த்து மாநிலம் முழுவதும் ஏராளமான மருத்துவ பட்டதாரிகள் "ஆன்லைனில்" விண்ணப்பித்தனர். சென்னையில் மட்டுமே தேர்வு நடக்கும் என்பதால், ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகளையும் எடுத்து விட்டனர். இந்நிலையில், மே 19ம் தேதி தேர்வு நடக்கும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை செல்ல ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பழைய டிக்கெட்டை ரத்து செய்தால் பண இழப்பு ஏற்படும். கோடை விடுமுறை நேரத்தில் மீண்டும் டிக்கெட் எடுத்தாலும் ரயில்களில் இடம் கிடைக்காது. இதனால் பெண்கள், குழந்தைகளை வைத்துள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment