Sunday, 21 April 2013

கற்பனைத் திறன் இருந்தால் ஊடகத்துறையில் சாதிக்கலாம்



                       பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள்,
வல்லுனர்கள் விளக்கினர்.  "ஊடகத்துறையின் எதிர்காலம்" குறித்து மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, ஊடகத்துறை பேராசிரியர் மணிகண்டன் பேசியதாவது: வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில், முக்கியமானது ஊடகத்துறை. பத்திரிகைகள், "டிவி", சினிமாவில் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன
                             நம் நாட்டில், 800 வானொலி நிறுவனம்; 5000 "டிவி ' நிறுவனம்; 10 ஆயிரம் "டிவி" நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்கள், தலா 1000 விளம்பர மற்றும் மல்டிமீடியா நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத பணிகளில் ஏராளமான பணியிடங்கள் உள்ளன. "டிவி" நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களில் மட்டும் 3.50 லட்சம் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். பெண்கள், "டிவி" நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக ஜொலிக்கலாம். மேலும், ஆடியோ, வீடியோ ஜாக்கிகளாகவும் வலம்வர, பெண்களுக்கு வாய்ப்பு உள்ளது. விளம்பர நிறுவனங்களுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகள், சென்னை, புனே, கோல்கட்டாவில் உள்ளன. மதுரையில், சுப்ப லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில், பிலிம் மற்றும் "டிவி" நிகழ்ச்சி தயாரிப்பு, விஷூவல் மீடியா போன்ற படிப்புகளுக்கு, சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
                                  இத்துறையில் கற்பனைத் திறனும், கலை ஆர்வமும் இருந்தால் சாதிக்கலாம். மீடியா படிப்புகளுக்கு, வெளிநாடுகளிலும் நல்ல சம்பளத்தில், வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல்கலை அங்கீகாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ள, கல்லூரிகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். பெண்கள், வீட்டில் இருந்தே, ஆன்லைன் மூலமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம், என்றார். அனிமேஷன்: அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறை எதிர்காலம் குறித்து சரண்குமார் பேசியதாவது: அனிமேஷன் என்பது, நாம் மனதில் நினைப்பதை, கற்பனைத் திறன் மூலம் ஸ்கிரீனில் கொண்டு வருவதுதான். 2டி, 3டி போன்ற நவீன தொழில்நுட்பமும், இத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
                               "அவதார்", "ஐஸ் ஏஜ்" போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் 3டி அனிமேஷனுக்கு பின்புலத்தில், தமிழக தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளனர். இப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு, பல்வேறு துறைகள் வேலை வழங்க காத்திருக்கின்றன.  பி.எஸ்சி., அனிமேஷன் படிக்க, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியை போல், தரமான கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். பல்கலை அங்கீகாரமும் முக்கியம். இப்படிப்பிற்கு வங்கியில் கல்விக் கடனும் வழங்கப்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment