தமிழகத்தில் உள்ள, அனைத்து விடுதி சமையலர்களுக்கும், அந்தந்த நலத்துறை நிர்வாகம், புதிய பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு உள்ளது. விரைவில், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என, கூறப்பட்டது. ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,300 விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள்; 301 உண்டு உறைவிட பள்ளிகள்; பிற்படுத்தப்பட்டோருக்காக, 1,294 விடுதிகள் உள்ளன. இந்த விடுகளில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளை உணவும், சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. மேலும், குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட சிறப்பு நாட்களில், உணவில், இனிப்பு வகைகளும் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட, 23 குழந்தைகள் இறந்தனர்; அதே போல், தமிழகத்தில் விடுதியில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள, விடுதி சமையலர்களுக்கு, புதிய பயிற்சி அளிக்க, நலத்துறைகள் திட்டமிட்டு உள்ளன. இப்பயிற்சியில், சுகாதாரமான முறையில் உணவைச் சமைப்பது, அவற்றை முறையாகப் பாதுகாப்பது, ஆய்வுக்கு உட்படுத்துவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், மாணவர்களிடம் எவ்வாறு மனிதநேயத்துடன் பழக வேண்டும் என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்படும் என, தெரிகிறது. இப்பயிற்சிகள் உரிய முறையில் அளிக்கப்பட்டு, ஓரளவு அமல்படுத்தப்பட்டால் கூட, மாணவர்களுக்குச் சுகாதார சீர்கேடு பாதிப்புக் குறையும் வாய்ப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment