Tuesday, 30 July 2013

பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகளை உடனுக்கு உடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அரசு உத்தரவு


             பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனுக்கு உடன் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம்
முழுவதும் பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து மாநில அளவில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே தெரிய வருகிறது. இதனால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் உடனே அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல்களை தெரிவிக்க பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும் 14 அம்ச திட்டங்களை செயல்படுத்துதலில் உள்ள குறைபாடுகள், முக்கியமாக மாணவ, மாணவிகளை நேரடியாக பாதிக்கும் சத்துணவு செயல்படுத்துவதில் குறைபாடுகள், மாணவ, மாணவிகளை வழிநடத்துதல், பள்ளிகளில் இருந்து சுற்றுலா அழைத்துச் செல்லுதல், நாட்டு நலப்பணித்திட்டத்திற்கு அழைத்துச் செல்லுதல், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் முரண்பாடன செயல்கள், ஒழுக்கக் கேடுகளை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட எதிர்பாரத சம்பவங்கள் நிறைய ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தையும் உடனே மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

                          முதல் கட்டமாக நிகழ்வுகளை கேள்விப்பட்டவுடன், அதை சரியா என உண்மைத் தன்மை குறித்து விசாரித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகவல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அதையடுத்து, அத் தகவலை பள்ளிக் கல்வி துறை இயக்குநர் அலுவலகத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்கப்படும். பின்னர் அங்குள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கியமான அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருந்தால் உடனே தலைமையாசிரியர்களே நேரடியாக உயர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களான மாநில பள்ளிக் கல்வி இயக்குநர்-28278796, இணை இயக்குநர்(பணியாளர் நிர்வாகம்)-28276340, இணை இயக்குநர்(மேல்நிலைக் கல்வி)-28280186, இணை இயக்குநர்(நாட்டு நலப்பணி திட்டம்)-28204340, இணை இயக்குநர்(தொடக்க கல்வி)-28250523 ஆகியோருக்கு தெரிவிக்கவும் வேண்டும் என பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment