Saturday, 27 July 2013

அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி? - நாளிதழ் செய்தி


             தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்தி
அடைந்துள்ளனர். தமிழகத்தில், சில ஆண்டுகளாகவே துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, கடும் சரிவை சந்தித்து வந்தது. மக்கள் தொகை அதிகரிப்பால், ஆண்டுக்காண்டு அதிகரிக்க வேண்டிய, முதல் வகுப்பு சேர்க்கை, குறைந்து கொண்டே வந்ததற்கு முக்கிய காரணம், பிரைமரி, நர்சரி பள்ளிகள். இதனால் கட்டணம் கட்ட வழியில்லாதவர்கள் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். ஆண்டுக்காண்டு, மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால், அதற்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்களின் அதிருப்தி, ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு உள்ளிட்டவை களால், 40:1 என்ற விகிதத்தில் இருந்த மாணவர், ஆசிரியர் விகிதத்தை, 30:1 என்ற விகிதத்தில் மாற்றிஅமைத்தனர்.
                            இருந்த போதும், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்காததால், பணிபுரியும் ஆசிரியர்களின் பதவியை தக்க வைத்துக்கொள்ள, "ஆங்கில வழிக்கல்வி" என்ற கோஷத்தை முன்வைத்தது. இதை அரசும் ஏற்று, அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி துவக்க உத்தரவிட்டுள்ளது. ஆங்கில வழிக்கல்வி என்றதும், தனியார் பள்ளிகளில் பணம் கட்ட சிரமப்படும், பெற்றோர் ஆவலுடன் அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு முதல் வகுப்பில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஆண்டு முதல் வகுப்பில், 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 947 மாணவர்கள் சேர்ந்தனர். நடப்பாண்டில், 4 லட்சத்து, 14 ஆயிரத்து, 567 பேர் சேர்ந்துள்ளனர். 93,000 மாணவர் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் அதிகமாகியுள்ளதாக கல்வி துறை அலுவலர்களும் பெருமிதப்பட்டு கொள்கின்றனர். ஆனால், பள்ளிகளில் காணும் நிலையோ, தலைகீழாக உள்ளது.
                       ஆங்கில வழிக்கல்வி மோகத்தில், பெரும்பாலான பள்ளிகளில் இருந்த மொத்த தமிழ் வழிக்கல்வி மாணவர்களும், ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் குறைவாக சுருங்கி உள்ளது. நகர்ப்புற பள்ளிகளில் பெரும்பாலும், இரு ஆசிரியர் கொண்ட பள்ளிகளாகவே உள்ளதால், அவற்றில், தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி என, அனைத்து மாணவர்களையும், ஒரே வகுப்பில் அமரவைத்து, ஒரே ஆசிரியர் பாடம் நடத்துகிறார். அதே போல், ஆங்கில வழிக்கல்விக்கென, செயல் வழிக்கற்றல் அட்டை எதுவும் வழங்கப்படாததால், அவர்களுக்கும், தமிழ் வழிக்கல்விக்கான அட்டை மூலமே கற்பிக்கப்படுகிறது. இதனால் பெயரளவில் மட்டுமே, ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கப்பட்டு, வகுப்பு சூழலில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

                              இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ஆங்கில வழிக்கல்வி என்றால், அதற்கென தனி ஆசிரியர், தனி வகுப்பறை, பாடப்புத்தகம், செயல் வழிக்கற்றல் அட்டை என, அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஆனால், இங்கு எல்லாமே, தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு வழங்குவதையே, கொடுத்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு பயந்து, அரசு பள்ளியில் சேர்த்த பெற்றோரின் நம்பிக்கையும் உடைக்கப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் இருந்த தமிழ் வழிக்கல்வி அழிவதோடு, தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே அமைந்துவிடும். இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment