Wednesday 31 July 2013

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்காததால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்

             இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்காததால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.இடைநிலை ஆசிரியர்கள் இடைநிலை
பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2009-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஏராளமானோர் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் தற்போது சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற தொலை தூர மாவட்டங்களில் தங்களது குடும்பத்தை விட்டு விட்டு பணியாற்றி வருகின்றனர். தற்போது வரை இந்த ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதுமட்டுமல்லாமல், எங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கியது போன்று எங்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. குறைவான சம்பளமே பெற்று வருகிறோம். ஊதிய குறைப்புஇதுபோன்ற சூழ்நிலையில் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு குறித்து 3 நபர் ஊதியக்குழு அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இல்லை. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்று உள்ளது. 6-வது ஊதியக்குழுவில் மிகக்கடுமையாக இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர். ஒருநபர் குழுவிலும் புறக்கணிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் 3 நபர் குழுவிலும் மிக மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளனர். எந்த ஊதியக்குழுவிலும் ஊதிய இழப்பு என்பது இருக்காது. ஆனால் தமிழகத்திலேயே 6-வது ஊதியக்குழுவில் தான் ஒரு பதவிக்கு ஊதிய குறைப்பு என்பது முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். மறியல் போராட்டம்அப்போது, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க பரிந்துரைப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட 3 நபர்கள் கொண்ட குழுவின் அறிக்கையில் இல்லை. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி மதுரையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது. இதில் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. இதன்பின்பு, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment