Thursday 29 August 2013

அரசு ஆணையை நிராகரித்த கல்வியியல் பல்கலை: பரிதவிப்பில் மாணவர்கள்


            தமிழகத்தில் பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசு ஆணையை, பல்கலை., நிராகரித்துள்ளதால் மாணவ, மாணவியர் பரிதவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக, கடந்த
2009ம் ஆண்டு கல்வியியல் பல்கலையை தமிழகத்தில் அரசு நிறுவியது. தற்போது, இந்த பல்கலை., யின் கீழ் ஏழு அரசு பி.எட்., கல்லூரிகளும், 14 உதவி பெறும் பி.எட்., கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் பி.எட்., கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நிபந்தனைகளுடன் அரசாணையை (எண் 121, 2013) கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி தமிழக அரசு அனுப்பியுள்ளது.
                               
அந்த அரசாணையில் இளங்கலை பட்டப்படிப்பில் பயோ கெமஸ்டரி, அப்ளைடு கெமஸ்டரி படித்தவர்கள் பி.எட்., படிப்பில் பிசிக்கல் சயின்சில் சேரலாம் எனக் கூறியுள்ளது. மேலும், .சி., பிரிவினருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் 50 சதவீதமும், பி.சி., பிரிவினருக்கு 45 சதவீதமும், எம்.பி.சி., பிரிவினருக்கு 43 சதவீதமும், எஸ்.சி., பிரிவினருக்கு 40 சதவீதமும் மார்க்கும் குறைந்த பட்ச மார்க்காக நிர்ணயித்திருந்தது. இதில், ஒரு சதவீத மார்க் குறைந்தாலும் பி.எட்., படிக்க தகுதி இல்லாதவர்கள் ஆகின்றனர். ஆனால், இளங்கலை பட்டப்படிப்பில் படித்த அதே பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் பி.எட்., படிப்பில் சேர, மேற்குறிப்பிட்ட குறைந்த பட்ச மார்க்குகள் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலையில் மேஜர் பாடம்(பகுதி மூன்று) துணைப்பாடம் (பகுதி நான்கு) பாடங்களில் மார்க்குகளைக் கூட்டியே சதவீதம் கணக்கிட வேண்டும் என அரசாணை கூறுகிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. பல தனியார் பி.எட்., கல்லூரிகளில் வகுப்புகள் துவங்கிய நிலையில், கல்வியியல் பல்கலை., தமிழக அரசின் ஆணையை நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
                       
அதில், இளங்கலை பட்டப்படிப்பில் பயோ கெமஸ்டரி, அப்ளைடு கெமஸ்டரி படித்தவர்களை பி.எட்., படிப்பில் சேர்க்கக்கூடாது என்றும், முதுகலைப் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், இளங்கலை பட்டப்படிப்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட சதவீத மார்க்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே பி.எட்., படிப்பில் சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும், மேஜர் பாடத்தை மட்டும் கணக்கில் எடுத்து சதவீத மார்க் கணக்கிட வேண்டும் எனவும், இதை மீறி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், ஆசிரியர் கனவில் வந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
                        
இதுகுறித்து களியக்காவிளையைச் சேர்ந்த மாணவி ஆதிரா கூறியதாவது: அரசு பட்டப்படிப்பில் பயோ கெமஸ்டரி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி போன்ற பாடங்கள் படித்தால் அதிக வேலை வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தது. இதை நம்பி நாங்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பட்டப்படிப்பு முடித்தோம். பட்டப்படிப்பு முடித்தவுடன் பலரும் பி.எட்., படிக்கச் செல்வது வழக்கம். அதுபோல், நான் பட்டப்படிப்பு முடித்தவுடன் ஒரு பி.எட்., கல்லூரியில் சேர்ந்தேன். பாட புத்தகம், கல்லூரி சீருடை போன்றவற்றை வாங்கி படிப்பைத் துவங்கினேன். கல்லூரி திறந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், பல்கலை., எங்களை பி.எட்., படிப்பில் சேர்க்கக்கூடாது என கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, கல்லூரியை விட்டு எங்களை நீக்கி உள்ளனர். அரசு ஆணைப்படி அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களைச் சேர்க்கின்றனர். இந்நிலையில், அரசு ஆணையை நிராகரித்து, பல்கலை., நீக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எங்களை பி.எட்., படிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஆதிரா கூறினார். இதுபோல் நூற்றுக்கணக்கான மாணவர்கள், அரசு மற்றும் பல்கலை.,யின் முரண்பட்ட அறிவிப்பால் பி.எட்., படிப்பில் சேர்ந்து, அதன்பின் தொடர்ந்து படிக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, அரசு அமல்படுத்தியுள்ள அரசாணைப்படி பி.எட்., மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதே இவர்களின் கருத்தாக உள்ளது.


No comments:

Post a Comment