இன்றைய சூழ்நிலையில் கூட்டுப்போராட்டம்தான் நம் துயர் துடைக்க சரியான பாதை என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் 7 இயக்கங்கள் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் அங்கம்
வகித்தன. மூன்று நபர் குழு அறிக்கைக்கு பின்னர் வெளிவந்த அரசானைணளில் இடைநிலை ஆசிரியர்கள் திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்த உடன் அரசாணைகள் வெளிவந்த அன்றே தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார தலைநகங்களிலும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தி தமிழக அரசிற்கு தனது எதிர்ப்பை முதலாவதாகவும், மிகவும் கடுமையாகவும் பதிவு செய்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. அதன் பின்னரும் டிட்டோ - ஜேக் இயக்கத்தில் உள்ள எந்தவொரு அமைப்பும் கூட்டு நடவடிக்கை மூலம் இந்த அநீதியை எதிரப்போம் என்று குரல் கொடுக்கவில்லை. மற்ற இயக்கங்கள் செய்ய மறந்த, செய்ய மறுத்த பல விசயங்களை தன் ஆக்ரோஷமான இயக்க நடவடிக்கைகளால் டி.என.பி.டி.எப். செய்து முடித்து வெற்றி கண்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கடந்த 18ந் தேதி தனது தலைமை அலுவலகத்திற்கு கூட்டு நடவடிக்கை குறித்து விவாதிக்க டிட்டோ-ஜேக்கில் அங்கம் வகிக்கும் 7 சங்க தலைமைக்கும் எமது பொதுச்செயலாளர் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் பின்னாலும் இயக்க தலைமையால் தொலைபேசியிலும் அழைக்கப்பட்டனர். அதன் பின்னர் 18ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூட்டு நடவடிக்கையில் அங்கம் வகித்த சில இயக்கங்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்காத காரணங்கள் குறித்து நாம் அலச போவதில்லை. அதனால் சில தேவையில்லாத சச்சரவுகளே வலம் வரும். நாம் வேண்டுவதெல்லாம் என்ன காரணத்தால் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள தயக்கம். தயங்குவதால் தரத்தில் தாழ்வு நிலைக்கு தரம் தாழ்ந்து போகப்போவது இடைநிலை ஆசிரியர்கள்தான். ஒரு வேளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அழைத்து நாம் போவதா? என்ற ஈகோ மற்ற இயக்கங்களுக்கு இருந்தால் டிட்டோ-ஜேக் என்ற பதாகையின் கீழ் ஒன்று சேர்ந்து போராட நமக்கு அழைப்பு விடட்டும். எங்கள் தலைமைக்கு ஈகோவெல்லாம் கிடையாது.
எங்களுக்கு கோரிக்கைதான் முக்கியம். கோரிக்கையின் தீவிரம் அறிந்து போராட எமது அமைப்பு தயாராகவே உள்ளது. அதற்கான வேண்டுகோளை எங்களால் எங்கள் தலைமைக்கு வைக்க முடியும். எங்கள் வேண்டுகோளை எங்கள் தலைமை நிச்சயம் ஏற்கும். அதற்கான உறுதியை எங்களால் தர இயலும். எமது வேண்டுகோள் மற்ற சகோதர இயக்கங்களை சார்ந்த தோழர்களும் தங்கள் தலைமைகளை ஏன் கூட்டுப்போராட்டத்திற்கு செல்ல மறுக்கிறீர்கள் என்று வினா தொடுத்து அவர்களையும் கூட்டு இயக்க நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். 18.8.2013 அன்று டி;டோ-ஜேக் அமைப்பில் உள்ள அனைத்து இயக்கஙகளும் ஒன்று சேர்ந்திருந்தால் 30.8.2013 டிட்டோ-ஜேக் மாவட்ட மறியலாகவும், 25.9.2013 மாநில மறியலாகவும் போராட்ட களம் தயார் படுத்தப்பட்டிருக்கும். தனிச்சங்க நடவடிக்கை என்பது பலம்பொருந்திய தனி மெஜாரிட்டி உள்ள ஆளும் அரசை அசைத்து பார்க்க இயலுமா? நாம் ஒன்று சேர்ந்து அசைத்தால் அம்மா அசைந்தே ஆக வேண்டும். அசைப்பதற்கு ஏன் இந்த தயக்கம். கோரிக்கை வென்றெடுத்தால் தம்மால்தான் வென்றெடுக்கப்பட்டது என்று தமது இயக்க வரலாற்றில் பதிவு செய்ய முயலும் இயக்கஙகள் கூட்டு வெற்றியை கொண்டாட மறுப்பது ஏன்? நெஞ்சில் மூண்ட நெருப்பிற்கு சமரசம் ஏதும் இல்லை என்ற இலட்சிய வேட்கையை எம் நெஞ்சில் நிறுத்தி போராட்ட களம் காணும் எங்களால் பொறுக்க இயலவில்லை. மற்ற இயக்கத்தினை குறை கூற இதை பதிவிட வில்லை. எமது ஆற்றாமையை, ஏக்கத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறோம். இது எமது சொந்த கருத்தே. எப்பாடுபட்டாவது இயக்கங்களை ஒன்றினைத்து வெற்றி கனியை பறித்து விட மாட்டோமா? என்ற அவாவே காரணம். ஆகவே தேழனே இடைநிலை ஆசிரியனின் இன்னல் தீர்க்க கூட்டு போராட்டத்திற்கு வித்திடுவோம். காலம் கடந்து எடுக்கப்படும் முடிவு விழலுக்கு இரைத்த நீராக அமைந்து விடும். இயக்க தலைமைகளை நிர்பந்திப்போம். இன்னல் தீர்க்க இணைந்து போராடுவோம். நீ முடிவெடுத்தால் அனைத்தும் சாத்தியமே!.
தோழமையுடன்.... ஆ.முத்துப்பாண்டியன்
No comments:
Post a Comment