Tuesday 15 October 2013

சிறந்த பள்ளிகள் தேர்வுப் பட்டியல் வெளியாவதில் தாமதம்: காத்திருக்கும் தலைமையாசிரியர்கள்


             மாநிலம் முழுவதும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக
கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்ற பிரிவுகளில் மாவட்டம் வாரியாக நான்கு சிறந்த அரசு பள்ளிகளை தேர்வு செய்து ரொக்கப்பரிசாக ரூபாய் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நடப்பு கல்வியாண்டு முதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒரு மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் நான்கு பள்ளிகளுக்கு 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.
                       மாநிலம் முழுவதும் 2.5லட்சம் வீதம் 32 மாவட்டங்களுக்கு 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்திக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்டத்திலும் பள்ளி வளாக தூய்மை, மாணவர்கள் சேர்க்கை, கட்டமைப்பு வசதிகள், பொதுத்தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி விகிதம், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள், விளையாட்டு, பிற தனித்திறன் போட்டிகளில் பெற்ற வெற்றிகள் என அரசின் விதிமுறைகளின் படி அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கல்வி அதிகாரிகளை கொண்ட சிறப்புக் குழு பள்ளிகளை ஆராய்ந்து தேர்வு செய்தது. கோவை மாவட்டத்தில் ஜூலை மாதம் இதற்கான ஆய்வுப்பணிகள் ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தப்பட்டு சிறந்த நான்கு பள்ளிகள் தேர்வு செய்து மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின், ஆய்வு முடிவில் தேர்வு பெற்ற பள்ளிகளின் பெயர்கள், விபரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டன. இதே போன்று அனைத்து மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகளின் பெயர்கள் தலைமை அலுவலக்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

                 அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: "ஜூலை இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிறந்த பள்ளிகள் பெயர்கள் வெளியிட்டு அதற்கான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, பள்ளிகள் தேர்வு செய்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் பெயர் பட்டியல் வெளியிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் நல்ல திட்டங்களை அரசு அறிவித்தாலும் அதை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் பயனில்லாமல் போகிறது. மேலும், சிறந்த பள்ளியில் எங்கள் பள்ளியின் பெயர் இடம் பெறாதா என்ற ஏக்கத்தில் அனைத்து தலைமையாசிரியர்களும் காத்திருக்கிறோம். உடனடியாக பெயர் பட்டியலை வெளியிட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்." இவ்வாறு, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment