Thursday 3 October 2013

முறைகேடுகளை தவிர்க்க அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு


             அரசுப்பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார்கள்
சென்றன. இதனையடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை தேர்வுத்துறை எடுக்க முன் வந்துள்ளது. அரசுப் பொதுத்தேர்வுகளில் அனைத்துப்பணிகளையும் தேர்வுத்துறை நேரடியாக செயல்படுத்தவுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாளில், விடைகளை எழுதும் மாணவர்களின் படமும், ரகசிய கோடு எண் பதிவு செய்யும் முறையை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்வு அறை குறித்து (ஹால் பிளானிங்) மாவட்ட கல்வி அலுவலகங்களில் முடிவு செய்து, மாணவர்கள் எந்த அறையில் தேர்வு எழுதுவார்கள், என்பது கணிக்கப்பட்டு வந்தது. தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை ஆகியோரையும், மாவட்ட கல்வி அலுவலகம் தான் நியமனம் செய்து வந்தது.

            இனி வரும் காலங்களில் தேர்வுத்துறை நேரடியாக தேர்வு அறை குறித்தும், அதில் எந்த மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பது குறித்தும் திட்டமிட்டு பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பவுள்ளது. வரும் பொதுத்தேர்வுகளில் அறைக்கண்காணிப்பாளர்கள், மற்றும் பறக்கும் படையினரையும் தேர்வுத்துறையே முடிவு செய்து, பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க உள்ளது. தேர்வு குறித்த அனைத்து பணிகளிலும் நேரடியாக தேர்வுத்துறை முடிவு செய்யவிருப்பதால், விருப்பு, வெறுப்புகளுக்கு தகுந்தாற்போல், இனி தேர்வுப்பணிகளில் அதிகாரிகள் நியமிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்க இந்த அதிரடி நடவடிக்கையை தேர்வுத்துறை செயல்படுத்தவுள்ளது. முதல்கட்டமாக இதற்கான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில், புதிய முறையில் தேர்வுப்பணிகள் கண்காணிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment