Thursday 4 July 2013

600 மாணவியருக்கு ஒரே தமிழாசிரியர்அரசுப்பள்ளியின் அவலத்தால் அதிர்ச்சி



                               நங்கவள்ளி: ஜலகண்டாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலைக்கல்வி பயிலும், 600 மாணவியருக்கு, தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு, தலா ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் கற்பிப்பதால், கல்வியின்
தரம் குறைந்துவிடும் அபாயம் உள்ளதாக, பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஜலகண்டாபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,900 மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், அரசுப்பள்ளிகளில், மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.இப்படிப்பட்ட பள்ளியில், நடப்பாண்டில், ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவியர், 600 பேர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக, தற்போது தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களுக்கும், தலா ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதால், நாள் ஒன்றுக்கு பத்து வகுப்புகள் எடுக்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால், எட்டு வகுப்புகள் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், இரண்டு பிரிவு மாணவியரை, ஒரே வகுப்பில் அமரவைத்து பாடம் எடுத்து வருகின்றனர். 150க்கும் மேற்பட்ட மாணவியர், ஒரே இடத்தில் அமர்ந்து பாடத்தை கவனிக்க வேண்டியுள்ளதால், வகுப்பறையின் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு சரியாக புரிவதில்லை. ஆசிரியர்களும், குறைபாடுடைய மாணவியரை கண்டறிந்து கற்பிக்க முடிவதில்லை.
               இப்பள்ளி, தேர்ச்சி விகிதம் மட்டுமன்றி, அதிக மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. அதனால், வெளியூரை சேர்ந்த மாணவியர், இங்கு சேர்ந்து படிக்கின்றனர். இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள, மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவியரின் கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, மாணவியரின் எதிர்கால நலன் கருதி, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.

No comments:

Post a Comment