பள்ளிகளில் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் மதிப்பீட்டு பணிச்சுமையை குறைக்கும் விதத்தில், "இ-ரெஜிஸ்டர்" அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த 2012-13ல் முப்பருவம்
மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்விமுறையை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. வளரறி மதிப்பீட்டு முறைக்கு 40 மதிப்பெண், எழுத்து தேர்வுக்கு 60 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பள்ளி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகள் கவனித்து, தனி மதிப்பெண்ணும், தனித்திறனுக்கு மதிப்பெண்கள், யூனிட் தேர்வுகளுக்கு தனியாகவும், எழுத்துத் தேர்வுக்கு மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.இதன் அடிப்படையில், மூன்று பருவங்களும் கணக்கிட்டு செய்து மாணவர்களுக்கு (ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி, இ ) கிரேடு மதிப்பிடப்படுகிறது. இதனால், அதிகரிக்கும் பணிச்சுமையை குறைக்க, " இ-ரெஜிஸ்டர் பார் சி.சி.இ.," என்ற "எக்செல் பைல்" பயன்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் கூட்டத்திலும், மாவட்ட அளவில் நடந்த ஆலோசனை கூட்டங்களிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை பதிவு செய்தால், மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படுவதுடன், இறுதி தர அறிக்கையை எளிதாக பெற இயலும். மேலும், ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் பாடவாரியாக மதிப்பெண் விழுக்காடு, சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டை அறிந்துகொள்ளலாம். இதனால், ஆசிரியர்களின் பணிச்சுமை வெகுவாக குறைக்கப்படும்.
அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான முறை பின்பற்றும் படி (இ-ரெஜிஸ்டர் பார் சி.சி.இ.,) எக்சல் பைல் வெளியிடப்படும்" என்றார். அரசு பள்ளி ஆசிரியர் பகத்சிங் கூறுகையில், "முன்பு இருந்த முறைப்படி மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்தால் போதும். தற்போது சிறிது சிறிதாக அதிக பணிகள் உள்ளது. இதை சரியாக செய்தால் மட்டுமே ஒரு மாணவனின் திறனை துல்லியமாக கணிக்க முடியும். அனைத்து மதிப்பீடுகளையும் எழுத்துமுறையிலே பதிவு செய்கிறோம். தற்போது, கூறப்பட்டுள்ள இ-ரெஜிஸ்டர் முறை, பணிகளை எளிமைப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
No comments:
Post a Comment