Monday, 1 July 2013

கல்விக் கடன்: பயன் தராத வங்கி ஆலோசனை மையங்கள்



             அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுக்கு உதவி புரிவதற்காக திறக்கப்பட்ட வங்கி ஆலோசனை மையங்கள் காலியாக கிடக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல்
படிப்பவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தற்போது பொதுப்பிரிவினர்களுக்கான கலந்தாய்வு பதினோராம் நாளாக நடைபெற்று வருகிறது. இது வரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கலந்தாய்வின் மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மாதம் கடைசி வரையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்திருக்கும் பலரும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். இதற்கு இந்த ஆண்டு முதல் தலைமுறை பட்டதாரிகளாக விண்ணப்பித்திருப்போரின் எண்ணிக்கையே சான்று ஆகும். ஒட்டுமொத்தமாக விண்ணப்பித்த 1 லட்சத்து 89 ஆயிரத்து 397 மாணவர்களில், 1 லட்சத்து 03 ஆயிரத்து 636 பேர் இந்த வகையினர். இது மொத்த மாணவர்களின் சதவிதத்தில் 54.72% ஆகும்.
                              
முதல் தலைமுறை மாணவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கு வங்கிகள் தரும் கல்விக் கடனையே எதிர் நோக்கி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலை மாணவர்களுக்கு உதவுவதற்காக வங்கிகளை அழைத்து வந்து ஆலோசனை மையங்களை அமைக்கப்பட்டது. இந்த மையங்கள் சில நாட்கள் செயல்பட்ட நிலையில், சில வங்கிகள் தங்கள் ஆலோசனை மையங்களை காலியாக விட்டுவிட்டன. இருக்கும் வங்கிகளின் மையங்களும் போதிய அக்கறை காட்டவில்லை. இது குறித்து ஒரு வங்கி ஊழியர் கூறியதாவது: "நாங்கள் ஆலோசனை மட்டுமே வழங்குகிறோம். வங்கிக் கடனுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. கல்விக்கடன் கேட்கும் மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டிற்கு அருகே உள்ள வங்கிக் கிளையின் மேனேஜருக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான ஆலோசனை கடிதம் அனுப்புவோம். ஆனால், கல்விக் கடன் தருவதும், தராமல் இருப்பதும் மேனேஜரின் முடிவை பொறுத்தது. அது தவிர ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
                                    
மாணவர்களுக்கு தாராளமாக கல்விக் கடன் அளிக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில், மாணவர்களின் கல்வி மேம்பட வேண்டுமென்றால், பெற்றோரின் பொருளாதாரம் கல்விச் செலவுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் மத்திய அரசின் அமைச்சர்கள் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் கடன் வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது
.

No comments:

Post a Comment