Sunday 7 July 2013

பொறியியல் பாடங்கள்:மாற்றி அமைத்தது அண்ணா பல்கலை

             பொறியியல் படிக்கும் மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை மேம்படுத்தி, வேலை வாய்ப்பு பெறுவதற்கான திறனை அளிக்கும் வகையில், பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து, அண்ணா பல்கலை
நடவடிக்கை எடுத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், 200க்கு, 200 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலையில் சேர்ந்தபின், தடுமாறும் நிலை உள்ளது. பெரும்பாலான மாணவர், மனப்பாடம் செய்து, தேர்வை எழுதி, மதிப்பெண்களை அள்ளி விடுகின்றனர். ஆனால், பொறியியல் படிப்பில், பிரச்னையை தீர்க்கும் ஆற்றலும், எதையும் வித்தியாசமான கோணத்தில் அணுகும் திறனும் முக்கியமாக உள்ளது. இதனால், மாணவர்கள், திணறி வருகின்றனர். குறிப்பாக, ஆங்கிலத்தில், சரளமாக பேசவும், எழுதவும் முடியாமல், ஏராளமான மாணவர் தவிக்கின்றனர். பல்வேறு திறமைகள் இருந்தாலும், ஆங்கில தொடர்பு திறன் இருந்தால் மட்டுமே, பொறியியல் மாணவர்களால், பன்னாட்டு நிறுவனங்களில், வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற நிலை உள்ளது.
                           இந்த பிரச்னையை உணர்ந்த அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம், மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் படிப்பு சார்ந்த துறைகளில், வேலை வாய்ப்பை பெறுவதற்கான திறனை அதிகரித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், பாடத்திட்டங்களில், தேவையான மாற்றங்களை செய்ய, நடவடிக்கை எடுத்தார். அதன்படி, நான்கு ஆண்டு பாடத்திட்டங்களிலும், மாணவர்களின் திறமை மேம்படுத்தும் வகையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, பல்கலை வெளியிட்ட அறிவிப்பு: அண்ணா பல்கலையின், பாடத்திட்ட குழு, கடந்த மே மாதம் கூடி, மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கு, ஒப்புதல் அளித்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த, எட்டு பேராசிரியர்கள், ஒப்புதல் அளித்தனர்.

*
ஆங்கில தொடர்பு திறன் பாடத்திட்டம், புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர், நம்பிக்கையுடன், ஆங்கிலத்தில் பேசும் திறனை பெறுவர். அதேபோல், இலக்கண பிழையின்றி, ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றலையும் பெற முடியும்.

*
கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை, சிறப்பான முறையில் எதிர்கொண்டு, பிரச்னைகளுக்கு, தீர்வு காணும் ஆற்றலை பெறும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

*
நவீன பொறியியல் உபகரணங்களை பயன்படுத்தி, தேவையான அறிவை மாணவர் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*
தொழிற்துறை மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறையில், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களை, எளிதில் எதிர்கொண்டு, அதற்கு தகுந்தாற்போல், தங்களை தயார்படுத்திக்கொள்ளவும், பாடத்திட்டம் வழி வகுக்கும். இவ்வாறு அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது
.

No comments:

Post a Comment