Monday 22 July 2013

வங்கிக் கணக்கில் உதவித்தொகை: அரசு கட்டாய உத்தரவு



                   "கல்வி உதவித் தொகையை, மாணவர்களுக்கே நேரடியாகச் செலுத்த, "கோர் பாங்கிங்" உள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க வேண்டும்" என அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் உதவி பெறும்
பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த காலங்கள் வரை, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, அரசு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் படி, கல்வி உதவித்தொகைக்கான, காசோலையை அரசு அனுப்பிவிடும். இவர்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரித்து வழங்கி, மாணவர்களிடத்தில் வழங்குவர். சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கிய, கல்வி உதவித் தொகையை முறைகேடாக எடுத்துச் செலவு செய்ததாக, அரசுக்குப் புகார் சென்றது. இதுபோன்று, மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகையில் ஏற்படும் முறைகேடுகளைக் களைய, நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, அரசு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் செலுத்த முடிவு செய்தது.
                     
அந்த வகையில், "கோர் பாங்கிங்" வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, மாணவர்கள் தமது வங்கிக் கணக்குகளைத் துவக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடுமாறு, அரசு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆதிதிராவிடர், பிற்பட்டோர் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "2013-14ம் கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, கல்வி உதவித் தொகை செலுத்த வேண்டும் என, அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது. இதற்காகவே, "கோர் பாங்கிங்" வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க, மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்" என்றார்
.

No comments:

Post a Comment