Friday 11 October 2013

பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர்


            இடமாறுதலில் செல்ல மனமில்லாததால், பள்ளிக்கு பூட்டு போட்டு, மாணவர்களை தவிக்க விட்ட தலைமை ஆசிரியர் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், .மீனாட்சிபுரம் நடுநிலைப் பள்ளியில், 150
மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; ஏழு ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அக்., 7ல், மஞ்சளார் பள்ளி தலைமையாசிரியை சுமதி, .மீனாட்சிபுரம் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய தயாநிதி, பெரியகுளம் நகராட்சி, 7ம் பகுதி பள்ளிக்கு, பட்டதாரி ஆசிரியராக மாற்றப்பட்டார். ஆனால், தயாநிதி அங்கு பொறுப்பேற்காமல், தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்க வந்த சுமதிக்கு, சாவியை கொடுக்க மறுத்துள்ளார். நேற்று காலை, 8:30 மணிக்கு, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், தலைமையாசிரியை சுமதி ஆகியோர், பள்ளி பூட்டியிருந்ததால், வெளியில் நின்றிருந்தனர்.

                         தயாநிதியின் மொபைல் போன், "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் மற்றும் பெற்றோர், சாலையில் அமர்ந்தனர். பெரியகுளம் ஆர்.டி.., மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் போலீசார், சுத்தியல், கம்பி, கற்களால் பூட்டை உடைத்தனர். தலைமையாசிரியர் அறையின் பூட்டும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சாவி மூலம், வகுப்பறைகள் திறக்கப்பட்டன. இரண்டு மணி நேரத்திற்கு பின் மாணவ, மாணவியர் பள்ளிக்குள் சென்றனர். தலைமையாசிரியை சுமதி, பொறுப்பேற்றுக் கொண்டார். ஆர்.டி.., ராஜேந்திரன் கூறுகையில், "பள்ளியை திறக்காமல் சாவியை வைத்துக் கொண்ட தலைமையாசிரியர் தயாநிதி மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment