Sunday 21 July 2013

சத்துணவு மையங்களில் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் சத்துணவு வழங்குவதில் சிக்கல்


                     சத்துணவு மையங்களில் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு தரமான சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுதமிழகத்தில் கடந்த 2011 ஜூலை 31ம் தேதி வரை சத்துணவு மையங்களில்
4,373 அமைப்பாளர், 5,717 சமையலர், 6,703 உதவியாளர் என மொத்தம் 16,793 காலிப்பணியிடங்கள் இருந்தன. இதையடுத்து அப்பணியிடங்களை பூர்த்தி செய்ய 2012 ஏப்ரலில் தமிழக அரசு உத்தரவிட்டதுவிருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே சத்துணவு பணியாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், சிவகங்கை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்படவில்லை. இதற்கிடையில் சத்துணவு பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டன. இதையடுத்து பணி நியமனத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை

                          இந்நிலையில் 2013 ஜூன் 30 வரை சத்துணவு மையங்களில் புதிதாக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன. இதனால் ஒரு சத்துணவு அமைப்பாளர் 2 அல்லது 3 மையங்களை கவனித்து வருகின்றார். பெரும்பாலான மையங்களில் சமையலர் இருந்தால், உதவியாளர் இல்லை. உதவியாளர் இருந்தால் சமையலர் இல்லை. சமீபத்தில் பீகார் மாநிலத்தில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளில் தரமான சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பதால், தரமான சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சத்துணவு ஊழியர் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு ஒருவர் மட்டுமே சமையல் செய்ய வேண்டியுள்ளது. 2 அல்லது 3 மையங்களுக்கு ஒரு அமைப்பாளர் மட்டுமே இருப்பதால் முறையாக கண்காணிக்க முடியவில்லை. இதனால் தரமான உணவு வழங்குவதில் சிரமம் உள்ளது. எனவே காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.

No comments:

Post a Comment