Monday, 1 July 2013

பள்ளிகளில் இன்டர்நெட் முடக்கம்: கணினி கல்வி கற்பதில் சிக்கல்



         அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள், கணினி கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கணினி கல்வியை மேம்படுத்த, 10
ஆண்டுகளுக்கு முன், அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்களுடன், தடையில்லா மின்சாதன கருவிகளும் வழங்கப்பட்டன. இதனால், மாணவர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று பயனடைந்தனர். மேலும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு, "எல்காட்" நிறுவனம் மூலம், இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பெறப்படும் தகவல்கள், உத்தரவுகள், உடனடியாக சி...,வின் வலைதளம் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பட்டன.
                  
இவை அனைத்தும், தமிழக அரசின் எல்காட் பொதுத் துறை நிறுவனத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தன. அரசு பள்ளிகள் கம்ப்யூட்டர் மயமானதால், காகித செலவு, காலவிரயம், வேலைப் பளு ஆகியன குறைந்து, கல்வித் துறையினர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், கம்ப்யூட்டர்கள் வழங்கி, 10 ஆண்டு களுக்கு மேல் ஆவதால், பெரும்பாலான பள்ளிகளில், யூ.பி.எஸ்., பழுதாகி, கம்ப்யூட்டர்கள் செயலிழந்து உள்ளன. இதனால் அரசு பள்ளிகளில், மாணவர்கள், கம்ப்யூட்டர் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும், இணையதளத்திற்கான தொலைபேசி கட்டணத்தை, எல்காட் நிறுவனம் செலுத்தாததால், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, அரசு பள்ளிகளில், இன்டர்நெட் வசதிகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. இது கல்வித் துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன
.

No comments:

Post a Comment