பள்ளிக் கல்வித் துறையில் 51 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், இப்போது பணியாற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு
கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேற்பார்வையிடுவதும் பாதிக்கப்படுவதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர். பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. மொத்தமுள்ள 181 பணியிடங்களில் 51 இடங்கள் காலியாக உள்ளன.திருவாரூர், மயிலாடுதுறை, ஈரோடு (மெட்ரிக் ஆய்வாளர்) உள்பட மாவட்டக் கல்வி அலுவலர் அந்தஸ்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாகி உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். சி.இ.ஓ. பணியிடங்கள்: அதேபோல், மொத்தமுள்ள 64 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களில் இப்போது 15 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. ஜூன் 30-ஆம் தேதியோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 5 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விருதுநகர், சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 2 சி.இ.ஓ. பணியிடங்களும் காலியாகவே உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அரியலூர் மாவட்டம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் விருதுநகர் மாவட்டப் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் இருந்தும் இந்தப் பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் நிலவுவதாக தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலும், கண்காணிப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையிலும் இந்தப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரம் உயர்த்தப்படாத பள்ளிகள்: அரசு உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவது தாமதமாவதால் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்கூட வேறு பள்ளிகளில் சென்று பிளஸ் 1 சேர்ந்துவிட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்தப் பள்ளிகளில் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்கும் வகையில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். சி.இ.ஓ., டி.இ.ஓ., பணியிடங்கள் மட்டுமன்றி இணை இயக்குநர், இயக்குநர் அந்தஸ்திலும் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் இந்த இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment