Saturday 21 September 2013

காலிப்பணியிடம் நிரப்பிய பின் நடவடிக்கைஅங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள சத்துணவு மையத்தை, அருகில் உள்ள மையத்துடன் இணைக்கப்பட உள்ளது.


                         இம்மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், இணைக்கும் பணி மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், மாவட்ட சமூக நலத்துறை சார்பிலும், 3,500க்கும் மேற்பட்ட சத்துணவு
மையங்கள், அந்தந்த யூனியன் மேற்பார்வையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கண்காணிப்பிலும் உள்ளன. இம்மையங்கள் மூலம் பல லட்சம் ஏழை குழந்தைகள், சத்துணவு சாப்பிட்டு பயன் பெறுகின்றனர். இம்மையங்களில் ஆண்டு தோறும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து, மையத்துக்கான செலவுகள் அதிகரிக்கிறது. ஒரு மையத்தில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என, மூன்று பேர் பணியாற்றும் நிலை தொடர்கிறது. 25 குழந்தைகளுக்கு குறைவான மையங்களிலும், இந்த மூன்று பேர் பணியாற்றுவதால், பணியிடம் காலியாக உள்ள மையத்தில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில், சமையலர் அல்லது அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள், சத்துணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள மையங்களை, அருகில் உள்ள மையத்துடன் இணைத்து விட்டால், ஆள் பற்றாக்குறை சமன் செய்வதுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு குழந்தைகளுக்கு, சத்துணவு வழங்க முடியும், என அரசு கருதுகிறது.
இதற்கான கணக்கெடுப்பு நடத்த, மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

               மேலும், சத்துணவு மையங்களில் வழங்கப்படும், உணவு பொறுப்பாளர் சாப்பிட்டு, பரிசோதித்த பின்னர்தான், குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டும், என அரசு கடந்த ஜூலையில் உத்தரவிட்டுள்ளது. அதோடு சத்துணவு மையங்களில் சுகாதாரம், குடிநீர் இணைப்பு, மின்வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், சென்னை சமூக நலத்துறை இணை இயக்குனர் தமிழரசி, சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின், அரசு செயலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட, ஈரோடு மாவட்ட மண்டல பொறுப்பாளர் பழனியப்பன் நேரில் ஆய்வு நடத்தினார். சமீப காலமாக சத்துணவு மையங்கள், அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளதால், குழந்தைகளுக்கு தேவையான நேரத்துக்கு உணவு, தரமானதாகவும், சுவையானதாகவும் வழங்கப்படுகிறது. பல மையங்களில் தேவையான ஊழியர்கள் இல்லாமல் பல சிரமத்துக்கு, மத்தியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதை சமன் செய்ய, குறைவான குழந்தைகள் உள்ள மையத்தை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுபற்றி, கலெக்டர் சண்முகம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில், 25 எண்ணிக்கைக்கு குறைவான குழந்தைகள் உள்ள மையத்தை அருகில் உள்ள மையத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இம்மையங்களில், காலியாக உள்ள பணியிடங்களை, நிரப்பிய பின், இணைக்கும் பணியை மேற்கொள்ளலாம், என முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment