பள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரி விதிப்பு அறிவிப்பு
கல்வித்துறையில் சில குறிப்பிட்ட
சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த வரியை மாணவர்கள் மீது கல்வி நிறுவனங்கள் சுமத்தி விடுமே என பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கல்வி தொடர்புடைய சில குறிப்பிட்ட சேவைகளுக்கு வரி கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டது குறித்து மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்திடம் பல்வேறு தரப்பினர் சார்பில் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
அனைத்து சேவைகள்
இதற்கு விளக்கம் அளித்து மத்திய அரசின் சார்பில், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் சார்பில் நேற்று ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், வரி விலக்கு அளிக்கப்படுகிற பட்டியலில் கல்வி சார்ந்த துணை சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த வகையிலான சேவைகளுக்கு எல்லாம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக, மாணவர்களை பள்ளியில் கொண்டு விடுவதற்கு பயன்படுத்தப்படுகிற வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிற சேவைகள்
வரிவிலக்கு பட்டியலில் வருகிற கல்வி சார்ந்த பிற சேவைகள் என்ற வகையில், விடுதிகள், உணவகங்கள், பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவையும் இடம் பெற்றிருப்பதாக மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் 12 சதவீத சேவை வரி விலக்கு வழங்கப்படும். இது கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment