கல்வி கடன் தவணை செலுத்த காலதாமதம் ஆனதால் ஜாமீன் கொடுத்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் ஓய்வூதியத்தை பிடித்தம் செய்த வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க
வந்த ஈரோடு அடுத்துள்ள மோளகவுண்டன்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி கூறியதாவது: ஈரோடு ரயில்வே காலனி தொடக்க பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி கடந்த 2000ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றேன். என் உறவினர் அருண்குமார் என்பவர் தந்தையை இழந்து வறுமையில் வாடினார். உயர்கல்வி பயில கல்வி கடன் கேட்டு கனரா வங்கியில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து கல்வி கடனாக 2.75 லட்சம் கடன் வழங்கப்பட்டது. அப்போது ஜாமீன்தாரராக நான் கையெழுத்து போட்டேன். இந்நிலையில் கல்லூரியில் படித்து முடித்து அருண்குமார் சென்னையில் பணியாற்றி வருகிறார். வங்கி கடனை மாதாமாதம் தவணை முறையில் திருப்பி செலுத்தி வருகின்றார்.இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாத தவணை திருப்பி செலுத்துவதில் காலதாமதம் ஆனதையடுத்து வங்கி நிர்வாகம் என்னுடைய அனுமதி இல்லாமல் எனது ஓய்வூதிய தொகையை பிடித்தம் செய்து கொண்டனர். மேலும் வங்கி கணக்கில் இருந்து நான் பணம் எடுக்க முடியாத வகையில் கணக்கை முடக்கி வைத்துள்ளனர். ஓய்வூதியம் என்பது வயதான காலத்தில் பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்படுவது ஆகும். ஆனால் அந்த தொகையை வங்கி நிர்வாகம் என்னுடைய ஓய்வூதியத்தில் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் பிடித்தம் செய்திருப்பதும்,கணக்கை முடக்கி வைத்திருப்பதும் தவறானது ஆகும். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு பழனிச்சாமி கூறினார்.
No comments:
Post a Comment