பொதுத்தேர்விற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டுத்
தேர்வுகளை மாவட்ட அளவில் பொதுத்தேர்வாக நடத்த வேண்டும். இதற்காக, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கு, மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு கட்டண வசூலில், முறைகேடு நடந்ததாக தலைமை ஆசிரியர்கள் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் விபரம்: விருதுநகர் மாவட்டத்தில் 2009 -10 கல்வி ஆண்டு முதல் 2012-13 வரை ஒரு கோடி 86 லட்சத்து 27 ஆயிரத்து 196 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணங்களை ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுமாறு தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சில தலைமை ஆசிரியர்கள் பொதுத்தேர்வு அமைப்பாளரிடமே நேரடியாக தொகையை கொடுத்தனர். இந்த தேர்வுக்கட்டண செலவு விவரங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டப்படி, அமைப்பாளரிடம் கேட்டபோது, பதில் கிடைக்கவில்லை. இதில் முறைகேடு நடந்தது தெரிந்ததால், அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. விசாரணையில், தனிநபரின் வங்கிக்கணக்கில் தேர்வுக்கட்டணம் டெபாசிட் செய்யப்பட்டது தெரிந்தது.
இதை, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது தகுந்த கணக்கில் மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தேர்வுக்கட்டண வசூலில் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி பணத்தை மீட்கவும், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம் வகிக்கும் விருதுநகர் மாவட்டம் கட்டண முறைகேடு சர்ச்சையில் சிக்கி உள்ளது.
முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "தேர்வுக்கட்டணம் வசூலித்ததில் முறைகேடு நடக்கவில்லை. அதற்கான வரவு, செலவு தெளிவாக உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டபோது, அதற்கான அனைத்து விவரங்களும், அவர்களுக்கு தரப்பட்டன. இதில் ஒளிவுமறைவு இல்லை. வீண் விளம்பரத்திற்காக, சிலர் தேவையற்றை சர்ச்சைகளை கிளப்புகின்றனர். அவதூறு ஏற்படுத்துவோர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
No comments:
Post a Comment