Monday 30 September 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு


              கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார். இதுக்குறித்து, இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம் வருமாறு...
1. பிஎட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பிஎட் ., பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.
2. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
3. பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
4. முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.

5. தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப்பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.

No comments:

Post a Comment