தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட ஆயிரக்கணக்கான ஆசிரியர்–ஆசிரியைகள் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அவர்கள் திரண்டனர். மாநில தலைவர் சோ.காமராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தை உலக கல்வி அமைப்பின் துணைத் தலைவர் ஈசுவரன் தொடங்கி வைத்தார். அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் கே.கணேசன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். சாலையில் அமர்ந்து தொடர்ந்து கோஷமிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 3000 ஆசிரியர்கள் சாரை சாரையாக கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றி செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
No comments:
Post a Comment