5 ஆண்டுகளுக்கு மேல் பிரிமியம் செலுத்தாமல் இடையில் நிறுத்திய பாலிசிகளை அக்டோபர் 31ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என்று எல்ஐசி தென்மண்டல பொது மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார். எல்ஐசியின்
தென்மண்டல பொது மேலாளர் சித்தார்த்தன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எல்ஐசியின் 57வது ஆண்டு விழா இன்று முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது எல்ஐசியின் தென்மண்டலம். இதில் 48 லட்சம் தனி நபர் காப்பீடு பாலிசியும், 46 லட்சம் குழு பாலிசியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 25 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. பாலிசி முதிர்வு தொகை, 5 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு ரூ.1,972 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தென்மண்டலத்தில் 261 கிளைகளும், 248 துணை கிளைகளும், 306 சிறு கிளைகளும் உள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகியவற்றில் 10 ஆயிரம் மக்கள் வசிக்கும் இடங்களில் புதியதாக 234 கிளைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில் ஏப்ரல் வரை 96 கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 138 கிளைகளும் விரைவில் தொடங்கப்படும். 5 ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாலிசிகளில் இடையில் நிறுத்தியவர்களுக்கு தற்போது ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசிதாரர்கள் தங்களது பாலிசிகளை ரூ.2 ஆயிரம் வட்டி சலுகையில் மீண்டும் புதுப்பித்து கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி அக்டோபர் 31ம் தேதி. 5 ஆண்டுக்கு மேல் உள்ளவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் உயிர் இழந்தவர்களுக்கு உடனடியாக பாலிசி தொகை வழங்கப்பட்டது. மீட்பு பணியின்போது உயிர் இழந்த மதுரையை சேர்ந்த விமானி பிரவினுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கப்பட்டது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போட்டிகளுக்கிடையே எல்ஐசி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
எல்ஐசியின் தென்மண்டல பகுதிகளில் 2 கோடியே 50 லட்சம் மக்கள் பாலிசி எடுக்க தகுதியிருந்தும் அதை பெறாமல் உள்ளனர். அவர்களில் 50 சதவீதம் பேரை இந்த ஆண்டுக்குள் பாலிசி பெற வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களை சந்தித்து குழு பாலிசி எடுக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார். பேட்டியின் போது, மண்டல மேலாளர்கள் விஜயராகவன், மாசில் ஜெயா மோகன், ரவிசந்திரன், ராஜூவன் நாயர் மற்றும் தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment