தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள
லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆக.30) முதல் நடந்து வருகிறது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர் மற்றும் கண் பார்வை பாதிக்கப் பட்டவர்கள்), முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இரண்டாம் நாளான சனிக்கிழமை பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. இயற்பியல், மனை அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி கூறியது: பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் நாளில் அரசு கல்லூரிகளில் இயற்பியல் பாடப் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 30 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கை நடைபெறும். இது போல் கணித இடங்களும் நிரம்பிவிட்டன.
ஆனால், மனை அறிவியல் பிரிவுக்கு மாணவர்களிடையே போதிய ஆர்வமில்லை. கலந்தாய்வு நடைபெறும் லேடி விலிங்டன் அரசுக் கல்லூரியில் உள்ள மனை அறிவியல் இடங்கள் மட்டுமே முழுவதுமாக நிரம்பியுள்ளன. பிற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன என்றார். கணிதம் மற்றும் புவியியல் பாடப் பிரிவுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் கணித பாடப் பிரிவுக்கு 490 பேரும், புவியியல் பாடப் பிரிவுக்கு 53 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். கலந்தாய்வு: இயற்பியல் பிரிவில் அனைத்து இடங்களும் நிரம்பின
No comments:
Post a Comment