Thursday 12 September 2013

பொது வினாத்தாளை பயன்படுத்த தனியார் பள்ளிகள் தயக்கம்


               பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும், காலாண்டு தேர்வுக்கான வினாத்தாளை பயன்படுத்த, சில தனியார் பள்ளிகள் தயக்கம் காட்டுகின்றன. அந்த பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டு முதல், தமிழகம் முழுவதும், அரசு
மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும், ஒரே மாதிரியாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதற்காக, வெளியிடப்படும் தேர்வு அட்டணையை, அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். பல தனியார் பள்ளிகள், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, 10ம் வகுப்புக்கும், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கும் தயார்படுத்துகின்றன. அதற்காக, இரண்டு ஆண்டுகளாக, படித்த பாடத்தை திரும்ப திரும்ப படிக்க வைத்து, அதிக தேர்ச்சி சதவீதத்தை காட்டுகின்றன.
                ஆண்டுதோறும் நடத்தப்படும் இடைத்தேர்வு, திருப்புத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு, அலகு தேர்வு ஆகியவற்றை, அரசுப் பள்ளிகள் போலவே, தனியார் பள்ளிகளும் கட்டாயம் நடத்த வேண்டும். அதற்காக, தனியார் பள்ளிகளிடம் இருந்து, வினாத்தாள் மற்றும் மதிப்பெண் தகுதி சான்று ஆகியவற்றிற்காக, தலா ஒவ்வொரு மாணவனிடமும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வினாத்தாள், ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் இருந்து, தேர்வு நடக்கும் பள்ளிக்கு, அனுப்பி வைக்கப்படும். அந்த வினாத்தாளை கொண்டு தான், தனியார் பள்ளிகள் மாணவர்களை தேர்வெழுத வைக்க வேண்டும். ஆனால், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, கல்வித்துறை வழங்கும் வினாத்தாளை, சில தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்குவதில்லை என்ற, குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவங்கியுள்ளது. கல்வித்துறை வழங்கிய வினாத்தாள்களை, தனியார் பள்ளிகள் பயன்படுத்துகின்றனவா என்பதை கண்காணிப் பதில், கல்வித்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

                கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி கல்வித் துறை உத்தரவுபடி, தனியார் பள்ளி மாணவர்களிடம், தேர்வு கட்டணம் மற்றும் மதிப்பெண் தகுதி சான்றுக்காக, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 20, 10ம் வகுப்பிற்கு, 50, பிளஸ் 1க்கு, 30, பிளஸ் 2க்கு, 70 ரூபாய் வசூலிக்கப்படும். சில தனியார் பள்ளிகள், பொதுத் தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்திக் கொண்டுஇருக்கையில், காலாண்டு வினாத்தாளை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றன. ஆனால், கல்வித்துறை சார்பில், கண்டிப்புடன், காலாண்டு வினாத் தாளை பயன்படுத்தி மாணவர்கள், தேர்வு அட்டவணைப்படி தேர்வெழுத வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. மெட்ரிக் கல்வி ஆய்வாளர் மூலமும் எடுத்துக் கூறப்பட்டது. இருந்தும், சில தனியார் பள்ளிகள், கல்வித்துறை வழங்கும் வினாத்தாளை பயன்படுத்தாமல், அவர்களால் தயார் செய்யப்பட்ட, வேறு வினாத்தாளை பயன்படுத்துகின்றன. அவர்களை, சி..., மெட்ரிக் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தான், ஆய்வு மூலம் கண்டுபிடிக்க முடியும். அதனால், தனியார் பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில், கல்வித் துறைக்கு சிக்கல் நீடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment